கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. சந்தையில் உள்ள இந்த சரிவு, பல முதலீட்டாளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நிப்டி 50-யில் இருக்கும் நிறுவனங்களில் சுமார் 45–50% நிறுவனங்களின் 3-ஆம் காலாண்டு நிதி முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இல்லை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து சுமார் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற பல காரணங்கள் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கு.
இந்த நிலையில், பங்குச் சந்தையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் விஷயமாக மத்திய பட்ஜெட் 2026 பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் செய்யப்படக்கூடிய மாற்றங்கள் பங்குச்சந்தைக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரித்தது, ஜிஎஸ்டி குறைப்பு போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதனால் 2025 ஆம் ஆண்டில் பங்குச்சந்தையும் சரி, தங்கம், வெள்ளி விலையும் சரி, மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு லாபத்தை கொடுத்தது. அந்த வளர்ச்சி பேஸ் முடிந்து தற்போது பங்குச்சந்தை ‘கரெக்ஷன்’ பேஸில் இருப்பதால் பெரும் அளவு மாற்றம் வராது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2016 முதல் 2025 வரை, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்துள்ளது. இதனால் பல முக்கிய நிறுவனங்களின் பங்கு மதிப்பீடு மிக அதிகமாக இருக்கு. இந்த கட்டத்தில் சந்தை சரிவை சந்திப்பது இயல்பான ஒன்றுதான் என்கின்றனர் வல்லுநர்கள். கடந்த 10 ஆண்டுகளாக சிறிய சரிவுகள் வந்தாலும் பெரிய சரிவு எதுவும் வரவில்லை.
ஒருவேளை இந்த சரிவு நீடித்தால் என்ன செய்வது என்ற கேள்வி நம்மில் பலருக்கு இப்போதே வந்திருக்கும். பெரும் சரிவு வருவதற்கு முன் இந்திய அரசும் DII – இந்திய நிறுவனங்களும் அதனை சரி செய்ய தேவையான முதலீடுகளை செய்வர்.
நீண்டகால முதலீட்டாளர்கள், எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் துறைகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது. உதாரணமாக, இப்போது இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையே வர்த்தக ஒப்பந்தம் 2027 ஜனவரி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் ஜவுளி, தோல் மற்றும் காலணி, கடல்சார் உணவுகள் போன்ற துறைகள் அதிக வளர்ச்சி அடையும். அதில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்வது சிறந்த முடிவு.
ஒருவேளை இந்த பட்ஜெட்டில் மூலதன செலவுகள், கட்டமைப்பு வளர்ச்சி, சிறு தொழில்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வந்தால், மார்க்கெட் மீண்டும் பாசிட்டிவாக மாற வாய்ப்பு இருக்கிறது.









