வணிகம்

தமிழ் பொறியாளர்களை ஒன்றிணைத்த சென்னை சர்வதேச மாநாடு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததால், ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சவாலுக்கு மாற்று வழிகளைத் தேடவும், புதிய வெளிநாட்டு சந்தைகளை உருவாக்கவும் இந்திய அளவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள தமிழ் பொறியாளர்களால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் முதல் சர்வதேச மாநாடு, கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து தங்களை காட்சிப் படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்தன. மாணவர்கள் தங்கள் ஐடியாக்களை தொழில்முனைவோரிடம் பகிர்ந்து கொள்ளும் Students Presentation உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த மாநாட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். துபாய், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். பின்னர், வெளிநாடுகளில் வேலை கிடைத்த 3,000 இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ் பொறியாளர்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கட்டுமானங்கள், அணைகள் கட்டிய பெருமை நமக்குண்டு. 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற துறைகளில் பணியாற்றுவோர் அவரவர் துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்கள். ஆனால், பொறியாளர்கள் மட்டும் எல்லா துறைகளிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழ் பொறியாளர்கள் தங்களின் ஐடியாக்களையும் ஆதரவையும் அரசுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

மாநாட்டில் கட்டுமானம், கனிமங்கள், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் வாயு, மின்சாரம், தொழில்நுட்பம், பயோ-மெடிக்கல், வேதியியல், உலோகங்கள், சப்ளை செயின் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்களின் பிரதினிதிகள் பங்கேற்றன.

Related Posts