வணிகம்

இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் பண்ணிட்டீங்களா?

2025-2026 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு முடிந்ததும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய முதலில் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்தது வருமான வரித்துறை. பின்னர் ITR படிவத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக இந்த தேதி செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். ஒரு வேளை இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். உதாரணமாக, உங்கள் வருமானம் 5 லட்சத்திற்குள் இருந்தால் ரூ.1,000 அபராதமும், 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் செலுத்த வேண்டும். இதுமட்டுமில்லாமல் TDS ரீஃபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல், பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட carry forward சலுகைகளையும் இழக்க வாய்ப்பு இருக்கு.

“கடந்த சனிக்கிழமை விவரம்படி 6 கோடி வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி (ITR) தாக்கல் செய்யாத அனைவரும், கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க விரைவில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று வருமான வரித்துறை தனது X தளத்தில் பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. வருமான வரி தாக்கல் செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவல் போலி செய்தி என்று IT துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Posts