கடந்த 30 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் காற்றாலை மின் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்ததை நான் நேரில் கண்டுள்ளேன். வளமான காற்று வளங்களும், தொலைநோக்கு கொண்ட அரசுக் கொள்கைகளும் இணைந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டின் மின் உற்பத்தி அமைப்பில் தனது இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, தமிழ்நாடு தனித்துவமான முன்னோடியாகத் திகழ்ந்தது. 1990-களில், காற்றாலை மின் உற்பத்தியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வங்கி வசதி (Banking), வீலிங் (Wheeling), மூன்றாம் தரப்பு மின் விற்பனை மற்றும் கவர்ச்சிகரமான மின் கட்டணக் கொள்கைகளை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அரசின் சாதகமான கொள்கைகளைப் போலவே, தொழில்துறையும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஜவுளித் தொழில் மையங்கள் அதிகரித்து வரும் மின் தேவையையும் மின் பற்றாக்குறையையும் சமாளிக்க காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் உற்பத்தியாளர்கள், திட்ட மேம்பாட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் திறமையான மனிதவளத்தைக் கொண்ட வலுவான தொழில் சூழல் உருவானது. இதன் விளைவாக, இந்தியாவின் காற்றாலைத் துறையின் மையமாக தமிழ்நாடு உருவெடுத்தது.
முன்னிலை இழந்த தமிழ்நாடு
கடந்த பத்து ஆண்டுகளில், மின் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிகள், கொள்கைத் தெளிவின்மை மற்றும் அனுமதிகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, தமிழ்நாடு தனது முன்னணி நிலையை படிப்படியாக இழந்தது. அதே நேரத்தில், பிற மாநிலங்கள் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்களை உருவாக்கி, தொழில் செய்வதற்கான எளிமையை மேம்படுத்தி, அதிக முதலீடுகளை ஈர்த்தன.
எதிர்கால வாய்ப்புகள்
அடுத்த கட்ட வளர்ச்சியை, தனித்தனி தொழில்நுட்பங்கள் அல்ல; பேட்டரி சேமிப்பு வசதியுடன் கூடிய காற்றாலை–சூரிய மின் ஒருங்கிணைந்த (Hybrid) திட்டங்களே வழிநடத்தும். காற்றும் சூரிய சக்தியும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகும். இதற்காக மாநில அரசு முன்னோடி திட்டங்களை ஊக்குவிக்கவும், சந்தை அமைப்புகளை உருவாக்கவும், மின் வலையமைப்பின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்தும் முதலீடுகளை ஆதரிக்கவும் வேண்டும்.
ரீபவரிங் (Repowering) திட்டங்களுக்கு தனி கொள்கை அவசியம்
பழைய காற்றாலைகளை அதிக திறன் கொண்ட புதிய இயந்திரங்களால் மாற்றும் ரீபவரிங் திட்டங்கள் மிகுந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவை எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை. நில உரிமைகள் சிதறிக் காணப்படுகின்றன. ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் காற்றாலை இயந்திரங்களை வைத்திருப்பதும் ஒரு சவாலாக உள்ளது. இழப்பீடு வழங்கும் முறை, சொத்து மதிப்பீடு போன்றவற்றிலும் தெளிவின்மை உள்ளது. ரீபவரிங் திட்டங்களுக்கென தனிப்பட்ட நிதி வசதிகளும் குறைவாக உள்ளன.
இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, நில உரிமை சிக்கல்கள், மின் வெளியேற்ற உரிமைகள், நிதிச் சலுகைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கிய தனித்துவமான கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவை. இந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தியாவின் காற்றாலைத் துறையில் தமிழ்நாடு மீண்டும் முன்னணியைப் பெறும்.
கடலோர காற்றாலை – அடுத்த வாய்ப்பு
கடலோர காற்றாலை மின் உற்பத்தியும் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான வாய்ப்பாகும். மாநிலத்தின் நீண்ட கடற்கரை இதற்கான சிறந்த வளத்தை கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, கடலோர காற்றாலை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதிக முதலீட்டுத் தேவை காரணமாக இதன் முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது. துறைமுகங்கள், சிறப்பு கப்பல்கள், நவீன உபகரணங்கள் மற்றும் உள்நாட்டு விநியோகச் சங்கிலி உள்ளிட்ட ஆதரவு கட்டமைப்புகளும் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை.
தற்போதைய சந்தை சூழலில், நிதி நெருக்கடியில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் இதன் அதிக செலவுகளை ஏற்றுக்கொள்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது.
மத்திய அரசின் ஆதரவுடன், Viability Gap Funding மற்றும் Blended Finance போன்ற நிதி ஆதரவுகளுடன் கூடிய முன்னோடி திட்டங்கள் கடலோர காற்றாலை வளர்ச்சியை வேகப்படுத்தும். தூய்மையான மின்சாரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், உலகளாவிய கடலோர காற்றாலை விநியோகச் சங்கிலியில் இந்தியாவை இணைக்கவும் இது உதவும்.
மீண்டும் முன்னிலை வகிக்க தேவையான அனைத்து அடிப்படை வலிமைகளும் தமிழ்நாட்டிடம் உள்ளன. எரிசக்தி மாற்றம் என்பது நம் தலைமுறைக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்த, தமிழ்நாடு வேகமாக புதுமைகளை உருவாக்கி, சிறப்பாகத் திட்டமிட்டு, உறுதியான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.









