சந்திராவின் முடிவு: நோயல் டாடாவுக்கு ஆதாயமா?
நோயல் டாடாவுக்கும், என். சந்திரசேகரனுக்கும் இடையே நீண்ட காலமாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. இந்த கருத்து வேறுபாடுகளின் முடிவாகவே, சந்திரசேகரன் தனது பதவியை தொடர விருப்பமில்லை என கடிதத்தில் தெரிவித்தார்.
7 ஏப்ரல் 2026 அன்று, Shortpost.in இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது, அதில், “டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரனுக்கு 2027க்குப் பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்குமா?” என்று கேள்வி எழுப்பபட்டிருந்தது.
சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 20 பிப்ரவரி 2027 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மீண்டும் பதவியில் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
சந்திரசேகரனின் முடிவு, டாடா குழுமத்தை நீண்ட காலமாக கவனித்து வருபவர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. பாம்பே ஹவுஸ் வட்டாரங்களும், விஷயம் தெரிந்த சில பத்திரிகையாளர்களும் எதிர்பார்த்த முடிவே இது.
அவர்கள் எதிர்பார்த்தது “இது எப்போது இந்த முடிவு வரும்?” என்பதுதான்.
ஆனால், பொதுவான முதலீட்டாளர்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி டாடா குழும நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை சரிந்தது. இதன் காரணமாக, டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.68,119 கோடி குறைந்தது.
பதவி நீட்டிப்பு விவகாரம்
தனது கடிதத்தில் சந்திரசேகரன் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருந்தார். சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை, தனது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரை செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், வாரிய உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு அளிக்காத நிலையில் அந்த முன்மொழிவு நிறைவேற்ற படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாததால், இந்த முடிவை ஒத்திவைக்க தான் முடிவு செய்ததாக சந்திரசேகரன் கூறியுள்ளார். அந்த வாரியக் கூட்டம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்தும், எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறியுள்ளார். இதனால் 2032ஆம் ஆண்டு வரை சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஒரு கொள்கை ரீதியான ஆதரவு இருந்தது. ஆனால், அந்த முடிவுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் சந்திரசேகரனின் அதிருப்தி, டாடா டிரஸ்ட்ஸ் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நாமினி இயக்குநருமான நோயல் டாடா மீது திரும்பியது. மேலும், சந்திரசேகரன் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குழுமத்துக்குள் இருந்து யாரும் வலியுறுத்தவில்லை. இதனால், இரு தரப்பினரும் இந்த முடிவுக்கு முன்பே தயாராக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உருவானது.
சந்திரசேகரனின் சாதனைகள்
சைரஸ் மிஸ்த்ரி பதவி விலகிய பிறகு, 2017 பிப்ரவரியில் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் டாடா குழுமத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்தது. 2017ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருந்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ.16.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், நிகர லாபமும் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.1.7 லட்சம் கோடியாக அதிகரித்தது. சந்திரசேகரன் TCS நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதுடன், டாடா குழுமத்தையும் சிறப்பாக வழிநடத்தியுள்ளார். டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் ஏர் இந்தியா போன்ற சில பின்னடைவுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சந்திரசேகரனின் நிர்வாகம் சிறப்பாகவே இருந்தது.
இப்போது முக்கியமான கேள்வி, அடுத்த டாடா குழுமத் தலைவர் யார்? என்பதுதான்.
நோயல் டாடாவின் முக்கியத்துவம்
69 வயதான நோயல் டாடா, ரத்தன் டாடா உயிருடன் இருந்த காலத்தில் அதிகம் வெளியில் தெரியாமல் தனது பணியில் கவனம் செலுத்தி வந்தார். Westside மற்றும் Zudio போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியின் மூலம் Trent நிறுவனத்தை முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக வளர்த்ததில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் காரணமாக, Trent மற்றும் Tata International நிறுவனங்களின் தலைவராகவும், Titan மற்றும் Tata Steel நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் அவர் பொறுப்புகளை வகித்தார்.
ரத்தன் டாடா 2024ஆம் ஆண்டு மறைந்த பிறகு, நோயல் டாடாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.குழுமத்தில் உள்ள பலரும், குறிப்பாக பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இந்த மாற்றத்தை வரவேற்றனர்.
நோயல் – மெஹ்லி மிஸ்த்ரி மோதல்
ரத்தன் டாடாவைப் போலவே, ஆரம்பகாலங்களில் சில கருத்து வேறுபாடுகள் நோயல் டாடாவும் பாம்பே ஹவுஸில் எதிர் கொண்டார். ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவராக இருந்த அறக்கட்டளை நிர்வாகி மெஹ்லி மிஸ்த்ரி, நோயல் டாடாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், மற்ற அறங்காவலர்களுடன் இணைந்து நோயல் டாடா செயல்பட்டதால், மிஸ்த்ரி மீண்டும் சில முக்கிய டாடா டிரஸ்ட் வாரியங்களில் நியமிக்கப்படுவதைத் தடுக்க முடிந்தது.இந்த இரண்டு டிரஸ்ட்களும் சேர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் 51 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளன. அந்த மோதல் நடந்த காலகட்டத்தில், நோயல் டாடா, சந்திரசேகரன், வேணு சீனிவாசன் மற்றும் டேரியஸ் கம்பட்டா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிலைமையை விளக்கினர்.
சந்திரசேகரனுக்கும் நோயலுக்கும் இடையிலான உரசல்
ஆரம்பத்தில் சந்திரசேகரனுக்கும் நோயல் டாடாவுக்கும் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இல்லை.ஆனால், நோயல் டாடா குழுமத்தில் தனது நிலையை வலுப்படுத்திய பிறகு, இருவருக்கும் இடையிலான உரசல் வெளிப்படத் தொடங்கியது.
குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் நோயலிடம் இருந்தன. அதனால், டாடா சன்ஸ் வாரியக் கூட்டங்களில் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவர் நேரடியாக கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்.
நோயலுக்கு நெருக்கமானவர்கள் அவரை மிகவும் நிதானமாக முடிவெடுக்கும் நபராக வர்ணிக்கின்றனர். பொதுவான பேச்சுகளை விட, ஒரு விஷயத்தின் குறிப்பிட்ட அம்சங்களில் அதிக கவனம் செலுத்துபவர் இவர்.
பதவி நீட்டிப்பு பிரச்சினை
24 பிப்ரவரி 2026 ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல முக்கிய தொழில்கள் குறித்து நோயல் டாடா கவலை தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், தனது பதவி நீட்டிப்பு குறித்த முடிவை அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்க சந்திரசேகரன் பரிந்துரைத்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, ஏற்கெனவே டிரஸ்ட்கள் பரிந்துரைத்திருந்த ஐந்து ஆண்டு பதவி நீட்டிப்புக்கு பதிலாக, 2027க்குப் பிறகு சந்திரசேகரனுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று நோயல் முன்மொழிந்துள்ளார். இதுவே இருவருக்கும் இடையிலான உறவில் முக்கியமான முறிவை ஏற்படுத்தியது.
நோயலின் கவலைகள்
குழுமத்தின் சில முக்கிய நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்புகள், நோயலின் கவலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. Economic Times தகவல்படி, 2026 ஆம் நிதியாண்டில் எட்டு டாடா நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.33,538 கோடியாக இருந்தது.
இதில் ஏர் இந்தியாவின் இழப்பு ரூ.22,238 கோடி.
டாடா டிஜிட்டலின் இழப்பு ரூ.4,974 கோடி.
இதற்கு அப்பால், மேலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் நோயலுக்கு கவலை அளித்தன.
முதலாவது, டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற RBI விதிமுறை.
இரண்டாவது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்த்ரி வைத்திருக்கும் 18.4 சதவீத பங்குகளை வாங்குவதற்கான நிதியை ஏற்பாடு செய்வது.
இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் சந்திரசேகரனிடம் இருந்து தெளிவான தீர்வுகளை நோயல் எதிர்பார்த்தார்.
சந்திரசேகரனின் அடுத்த கட்டம்
ரத்தன் டாடாவுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய சந்திரசேகரன், தொடர்ந்து நடைபெறும் முதலீடுகள் மற்றும் மூலதனச் செலவுகள் குறித்து நோயலிடம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை.
2018 முதல் 2026 வரை, சம்பளம் மற்றும் கமிஷன் மூலம் சந்திரசேகரன் சுமார் ரூ.908 கோடி பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் மோகனூரைச் சேர்ந்த சந்திரசேகரன், பல்வேறு சாதனைகளுடன் தனது பதவியில் இருந்து விலகுகிறார். மேலும், எதிர்காலத்தில் தனது சொந்த தொழில் முயற்சிகளில் முதலீடு செய்யவும், ஏஞ்சல் முதலீட்டாளராக செயல்படவும் தேவையான நிதி அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்தது என்ன?
ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் AGM போதிய உறுப்பினர்கள் வருகை இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. 108 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தற்போது நோயல் டாடாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மெஹ்லி மிஸ்த்ரியின் செல்வாக்கை பின்னுக்குத் தள்ளியுள்ள நிலையில், தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வரும் ஏர் இந்தியா மற்றும் டாடா டிஜிட்டல் நிறுவனங்கள் குறித்து நோயல் கடுமையான முடிவுகளை எடுக்கலாம். BigBasket, Croma, Tata CliQ மற்றும் 1mg போன்ற நிறுவனங்கள் தொடர்பாகவும் மறுபரிசீலனை செய்யப்படலாம்.
குறிப்பாக ஏர் இந்தியா தொடர்ந்து டாடா குழுமத்திற்கு நிதிச்சுமையாக இருந்து வருகிறது. அதன் செயல்பாட்டு பிரச்சினைகளுடன், சமீபத்திய அகமதாபாத் விமான விபத்தும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
நோயல் டாடா, பாம்பே ஹவுஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அமித் ஷா மற்றும் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளை மீண்டும் சந்தித்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான ஒரு தெளிவான திட்டம் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. அவரது 32 வயது மகன் நெவிலும் டாடா டிரஸ்ட்ஸ் வாரியத்தில் இடம்பெற்றுள்ளார். அவரது மகள்கள் லியா மற்றும் மாயாவும் டாடா குழுமத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
தற்போதைக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தின் தலைவராக ஒரு உள்நபரை நியமிக்க நோயல் விரும்பலாம். அதற்குப் பிறகு, 2032ஆம் ஆண்டில் 40 வயதை எட்டும் நெவிலுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கும் வாய்ப்பும் இருக்கலாம்.
அப்படி நடந்தால், டாடா குழுமத்தில் ஒரு தெளிவான தலைமுறை மாற்றம் ஏற்படும். JRD டாடா, டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றபோது அவருக்கு வயது வெறும் 34 என்பது குறிப்பிடத்தக்கது.
(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: Dhanalakshmi Baskaran.)









