இந்த டிஜிட்டல் காலத்தில், வாழ்க்கையின் பெரும்பாலான முடிவுகளை AI உதவியுடன் தான் எடுத்து வருகிறோம். சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் மட்டும் 60% பயனர்கள் ஒரு நாளில் குறைந்தது ஒரு AI செயலியையாவது பயன்படுத்துகின்றனர். சாப்பாடு செய்வது முதல் மெயில் எழுதுவது, ஹோம்வொர்க் செய்வது வரை — சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் AI-ஐ பயன்படுத்துகிறார்கள்.
தற்போது, முதலீட்டு தொடர்பான ஆலோசனைகளுக்குக் கூட பலர் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் புதிய முதலீட்டாளர்களில் சுமார் 35%, முதலீடு செய்வதற்கு முன் AI உதவியை நாடுகின்றனர் என fintech நிறுவனங்கள் கூறுகின்றன.
உதாரணமாக ஒருவர் ChatGPT-யிடம் “இந்த பங்கில் முதலீடு செய்யலாமா?” என்று கேட்டால், ChatGPT அந்த தகவலை கூறிய பின், “நான் இந்த பங்கை பரிந்துரைக்கவில்லை” என்ற வரியைச் சேர்த்து பதிலளிக்கும். AI மாடல்கள் நிதி ஆலோசனை வழங்க வடிவமைக்கப்படவில்லை; மேலும் இவை பங்கு சந்தையை தொடர்ந்து கண்காணிக்கவும் முடியாது.
ஆனால் நம்மில் பலர் இதைப் புரிந்து கொள்ளாமல், AI கொடுக்கும் தகவல்கள் சரியாக இருக்கும் என நம்பி அந்தப் பங்கில் முதலீடு செய்து விடுகிறார்கள். கடந்த வருடம் மட்டுமே, AI-ஐ நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்களில் 18% பேர் இழப்புகளை சந்தித்ததாக நிதி ஆலோசகர் தெரிவித்துள்ளனர்.
“பங்குச்சந்தை தொடர்பான தரவுகளை ChatGPT போன்ற AI கருவிகளின் மூலம் முடிவுகள் எடுக்க வேண்டாம்” என SEBI எச்சரித்துள்ளது. பொதுவாக நிதி சார்ந்த தகவல்களை நாமே சரியாக ஆராய்ந்து, அதற்கேற்ப முடிவுகள் எடுப்பது நல்லது.








