இந்தியாவில் பொன்னுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம். எந்த ஒரு பெற்றோரும், தங்களுடைய பிள்ளைகளுக்காக சிறந்ததையே செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனமாக இருப்பர். அந்த சிறந்ததில் முக்கிய இடத்தை பிடிக்கிறது — தங்கம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் போகிறது. சிலர் இதை இழப்பாக நினைத்தாலும், உண்மையில் இது ஒரு வாய்ப்பாகும். இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தாலே,சற்று வசதியுள்ளவர்கள் தங்கத்தை வாங்கி வைக்கலாமா? என நினைப்பது வழக்கம்.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்க தேவையானது 800 டன்களை தாண்டும் என கணிக்கப்படுகிறது, இது நாட்டில் தங்கத்திற்கு உள்ள மவுசை காட்டுகிறது. தங்கத்தின் விலை இந்தியாவில் ரூ.90,000 கடந்துள்ளது. இதற்கு நம் பெற்றோர் என்ன செய்வார்கள் என ஞாபகம் இருக்கிறதா? துபாயில் இருந்து உறவினர்கள் வரும்போது, அங்கிருந்து தங்கம் வாங்கி வரச் சொல்வதுண்டு. ஆனால் “இந்தியாவில் தங்கம் இருக்கும்போது, ஏன் துபாயிலிருந்து வாங்கச் சொல்கிறார்கள்?” என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

இதற்கு முக்கிய காரணம், துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவைவிட குறைவாக இருப்பதுதான். தங்க ஏற்றுமதியில் VAT (Value Added Tax) இல்லாததாலும், குறைந்த உற்பத்தி கட்டணங்கள் இருப்பதாலும், துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவைவிட சுமார் 8-9% குறைவாக இருக்கின்றது. இதனால் செலவுகளை குறைக்கும் நோக்கில் அங்கிருந்து தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனினும், தங்கத்தை இந்தியாவிற்கு சட்டப்பூர்வமாக கொண்டு வர சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்:
முதலில் நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 6 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி இருந்திருக்க வேண்டும். இந்தக் காலப்பகுதியில் 30 நாட்களுக்குள் இந்தியாவிற்கு செய்த குறுகிய பயணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் தனித் தனி அனுமதிக்கப்பட்ட தங்க வரம்பு உள்ளது. ஆண்கள் 20 கிராம் வரை சுங்க வரி செலுத்தாமல் எடுத்துச் செல்லலாம். இதே பெண்கள் என்றால் 40 கிராம் வரை சுங்க வரி இன்றி அனுமதிக்கப்படுவர். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 40 கிராம் வரை எடுத்துச் செல்லலாம்.
சுங்க வரி:
ஒரு வேளை நீங்கள் இந்தியாவிற்கு அனுமதிக்கப்பட்ட தங்க வரம்பை விட அதிகமாக தங்கம் கொண்டு வந்தால், அதற்கேற்ப சுங்க வரி விதிக்கப்படும். ஆண்களுக்கு 20 கிராம் மற்றும் பெண்களுக்கு 40 கிராம் என நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியபின், தங்கத்தின் அளவுக்கு ஏற்ப மாறுபடும் சுங்க வரி கட்டாயமாக செலுத்த வேண்டியிருக்கும்.

ஆண்கள் 20 கிராமை தாண்டி 50 கிராம் வரை தங்கம் கொண்டு வந்தால் 3% சுங்க வரி விதிக்கப்படும். அதற்கும் அதிகமாக, 50 – 100 கிராம் வரை தங்கம் இருந்தால் 6% சுங்க வரி விதிக்கப்படும். 100 கிராமுக்கும் மேலாக தங்கம் இருந்தால் 10% வரி செலுத்த வேண்டும். இதேபோல, பெண்கள் 40 கிராமை தாண்டி 100 கிராம் வரை கொண்டு வந்தால் 3% சுங்க வரி விதிக்கப்படும். 100 – 200 கிராம் வரை இருந்தால் 6% வரி மற்றும் 200 கிராமுக்கும் மேலாக இருந்தால் 10% வரி விதிக்கப்படும்.
துபாயிலிருந்து தங்கம் கொண்டு வரும்போது, சில முக்கியமான ஆவணங்களும் வழிகாட்டுதல்களும் அவசியம். முதலில், தங்கத்தின் அளவை சுங்கச் சோதனைச் சாவடியில் அறிவிக்க வேண்டும்; தூய்மை மற்றும் விலை விவரங்களுடன் கூடிய கொள்முதல் ரசீதுகளும் கட்டாயம். துபாயில் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து தங்கம் வாங்கி, அனைத்து ரசீதுகளையும், உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா பதிவுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். சுங்க கண்காணிப்பைத் தவிர்க்க, தங்கக் கட்டிகளை விட நகைகளை தேர்வு செய்வது நல்லது. அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறினால், தேவையான சுங்க வரியை செலுத்த தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சரியான ஆவணங்களுடன் திட்டமிட்டு பயணித்தால், எந்தவித சிக்கலும் இல்லாமல் தங்கத்தை சட்டபூர்வமாக கொண்டு வரலாம்.









