சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், Windergy INDIA 2026, சர்வதேச காற்றாலை வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ,இந்திய காற்றாலை தயரிப்பாளர் சங்கத்தின் (IWTMA) தலைவர் கிரிஷ் தாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த காற்றாலை மின் நிறுவுத் திறனில் முன்னனி வகிக்கும் மாநிலம் என்ற விருது குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல காற்றாலை மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என்ற விருது தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, OECD அமைப்பு, ஜெர்மனியின் BWE, PTB ஆகியவற்றுடன் IWTMA மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டது. இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பழைய காற்றாலைகளை நவீன தொழில்நுட்பத்துடன் Repowering செய்வது, காற்றாலை மின் உற்பத்தியை துல்லியமாக கணித்து திட்டமிடுவது, கடன் உத்தரவாதம், நிதி திரட்டும் முறைகள் ஆகியவற்றில் இந்த ஒப்பந்தங்கள் கவனம் செலுத்துகின்றன.
மேலும், ‘Energy Transition in Tamil Nadu’ மற்றும் ‘Reimagining Contractual Mechanisms for the Indian Wind Sector’ ஆகிய இரண்டு முக்கிய அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் மின் பரிமாற்றக் கட்டமைப்பு, காற்றாலை Repowering, Hybrid மற்றும் Offshore Wind, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை முதல் அறிக்கை கூறுகிறது. இரண்டாவது அறிக்கை, காற்றாலைத் திட்டங்களின் ஒப்பந்த முறைகளை நவீனப்படுத்தி, திட்டங்களின் நிதி நம்பகத்தன்மையை உயர்த்தவும், செயல்படுத்துதல் மற்றும் Grid தொடர்பான சிக்கல்களைக் குறைக்கவும் வழிவகைகளை முன்வைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,“முதலீட்டாளர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் முதலீட்டு நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, இயங்கிவரும் பல காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன. அவற்றை நவீனமயமாக்கும் மறு-மின்மயமாக்கல் (Repowering) சார்ந்த முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது” என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசின் புதிய Battery Energy Storage System (BESS) Policy ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்றார். இந்தக் கொள்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், உற்பத்தியாகும் மின்சாரத்தை திறமையாக சேமித்து தேவையான நேரங்களில் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றார். மேலும், பசுமை மின் வழித்தடக் கட்டமைப்பு (Green Energy Corridor – GC3) விரிவுபடுத்தப்பட்டால் தற்போது எதிர்பார்க்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை விட 3 முதல் 4 மடங்கு அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நிர்மல் குமார் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “இந்திய காற்றாலை எரிசக்தித் துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் அதிகபட்சமாக 6.05 ஜிகாவாட் மின் கட்டமைப்பு அமைத்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் இந்த சாதனை முறியடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறோம். 2030-க்குள் 100 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தேசிய இலக்கிற்கு இது பெரும் பலம் சேர்க்கும் வலுவான அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் இந்திய காற்றாலை மின் துறை அடுத்தகட்ட வளர்ச்சியை அடையத் தயாராக உள்ளது” என்றார்.
மேலும், 1990-களில் நிறுவப்பட்ட சுமார் 20 முதல் 25 ஜிகாவாட் அளவிலான பழைய காற்றாலைகள், ஆயுட்காலத்தின் முடிவை நெருங்கவுள்ளதாகவும், அவற்றை அதிக திறன் கொண்ட நவீன டர்பைன்களால் மாற்றுவதன் மூலம், மின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக தமிழ்நாட்டில் 2 மெகாவாட்டுக்கும் குறைவான திறன் கொண்ட பழைய காற்றாலை டர்பைன்கள் அதிகளவில் இருப்பதால், Repowering-க்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றார்.
மேலும், Green Energy Corridor திட்டத்திற்காக ரூ.54,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.1.86 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க முடியும் என எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, சுமார் 135 ஜிகாவாட் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை பரிமாற்றம் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கு சுமார் ரூ. 6,000 கோடி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன், தமிழக அரசுடன் இணைந்து நிர்வாக மற்றும் நிதி சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரஹலாத் ஜோஷி உறுதியளித்தார்.









