வணிகம்

விரிவாக்கப் பாதையில் வீல்ஸ் இந்தியா – ₹400 கோடி வரை நிதி திரட்டுகிறது

சென்னை, ஜூலை 10, வீல்ஸ் இந்தியா நிறுவனம் விரிவாக்கத் திட்டங்களுக்காகவும் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குக்காகவும் நிதி வலிமையை அதிகரிப்பதற்காகவும் ₹400 கோடி வரை நிதி திரட்டுவதற்கு, இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முகமதிப்பு ₹10 கொண்ட ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட நிதிப் பத்திரங்கள் (Equity-linked Instruments) மூலம் இந்த நிதி திரட்டல் மேற்கொள்ளப்படும். இதில் மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (Convertible Preference Shares), வாரண்ட்களுடன் கூடிய மாற்றமற்ற கடன் பத்திரங்கள் (Non-Convertible Debt Instruments), முழுமையாக மற்றும் பகுதியளவு மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் (Fully/Partly Convertible Debentures), ஈக்விட்டி பங்குகளாக மாற்றக்கூடிய பிற பத்திரங்கள் இவற்றில் இடம்பெறலாம்.

இந்த வெளியீடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டங்களாக, பொதுப் பங்கு வெளியீடு, தனியார் ஒதுக்கீடு, உரிமைப் பங்கு வெளியீடு (Rights Issue), முன்னுரிமை ஒதுக்கீடு (Preferential Allotment), தகுதி பெற்ற நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு (Qualified Institutions Placement – QIP) உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

நிதி திரட்டல் தொடர்பான காலம், விலை, விதிமுறைகள் மற்றும் இதர செயல்பாட்டு முறைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பு, இயக்குநர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

வலுவான நிதிச் செயல்திறன்

கடந்த நிதியாண்டில், ₹5,124 கோடி வருவாயில் ₹139 கோடி நிகர லாபம் ஈட்டியதால், நிறுவனத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதிய முதலீடுகள், திறன் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வகையில் இந்த நிதி திரட்டல் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பல்துறை வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்

வீல்ஸ் இந்தியா நிறுவனம், லாரிகள், விவசாய டிராக்டர்கள், பயணிகள் கார்கள், கட்டுமான இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான சக்கரங்கள் தயாரிப்பதில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும், லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான ஏர் சஸ்பென்ஷன் அமைப்பதிலும், கட்டுமானம் மற்றும் காற்றாலைத் துறைக்கான தொழில்துறை உதிரிப்பாகங்கள் தயாரிப்பதிலும் குறிப்பிடத்தக்க வகையில் தன் பங்கை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி ஆலைகளை கொண்டு இயங்கி வருகிறது.

Related Posts