சிறப்பு கட்டுரைகள்

நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீசும் மனம்…நரசுஸ்!

“காலைல நல்ல சாப்பாடு.. அதை முடிச்சதும் ஸ்டராங்கா ஒரு காபி..” இப்படிதான் சிலோரட நாள் ஆரம்பம் ஆகிறது. அப்படியான காபி இந்தியவிற்குள் எப்படி நுழைந்தது? 17 ஆம் நூற்றாண்டில் சூஃபி துறவி பாபா புடான் என்பவர் ஏமன் நாட்டின் மோக்காவிலிருந்து காபி விதைகளை எடுத்துவந்து கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரில் உள்ள பாபா புடாங்கிரியில் (சந்திர தோனா மலை) விதைத்தார். அங்கு தொடங்கியது.. இந்தியர்களுக்கும் காபிக்குமான உறவும் அது சார்ந்த தொழிலும்.

இந்த தொழில் வளர்ச்சியை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது நூற்றாண்டை கடந்த தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க ‘நரசுஸ்’. உரிமையாளர்கள் பல முறை மாறியபோதும் அதை சமாளித்து, இன்ஸ்டன்ட் காபி துறைக்குள் காலடி எடுத்து வைத்தது நரசுஸ். இப்போது கோலியாத்தை வென்ற சிறுவன் டேவிட்டை போல, பல பலநாட்டு பெருநிறுவனங்களுக்கே சவால் விடும் அளவில் நரசுஸ் வளர்ந்திருக்கிறது.

1919 ஆண்டிலிருந்து..

1919 ஆண்டில் பச்சை காபி விதைகளின் மொத்த வியாபாரம் செய்யும் வகையில் நரசுஸ் ஆரம்பிக்கப்பட்டது. 1926ல், அந்நிறுவனம் அந்த காபி விதைகளை வறுத்து அரைத்து நவீன காபி வணிகத்திற்குள் நுழைந்தது. இந்த தொலைநோக்கு பார்வையை கொண்டவராக இருந்தவர், பலரால் ‘நரசுஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும் இதன் நிறுவனர் வி லக்ஷ்மி நரசிம்மன். அவருடைய தலைமையின் கீழ் இந்நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. அந்த காலத்தில், மதராஸ் மாகாணத்தில் (தற்போதைய சென்னை) நான்கு கிளைகளை நிறுவியது. அதுவே நரசுஸ் தனித்துவமான நிறுவனமாக உருவெடுக்க அடித்தளமாக அமைந்தது.

சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள கட்டிடத்தை, 1939ல் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் அப்போதைய தொழித்துறை மற்றும் தொழிலார் துறை அமைச்சர் V.V.கிரி துவங்கி வைத்தார். “பொதுமக்கள் இந்த வகை காபியை அதிகம் விரும்புவதால், சக்திவாய்ந்த நவீன இயந்திரங்களை இந்த தொழிற்சாலையில் கொண்டுவந்துள்ளோம். எங்களுடைய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், பெருமளவில் காபி தூளை விற்பனை செய்வதில் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம்” என்று 1939ல் தொழிற்சாலை திறப்பு விழாவில் நரசுஸ் பேசியிருந்தார்.

இரட்டிப்பு வருவாய் ஈட்டும் முதலீடு

நரசுவின் மறைவிற்கு பிறகு அந்த நிறுவனம் சில நிதி நெருக்கடிகளை சந்தித்த நிலையில், 1966 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை RP சாரதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வாங்கினார். “என்னுடைய அப்பா RP சாரதி மற்றும் என்னுடைய தாத்தா, இருவரும் இணைந்து ஏற்கனவே வசந்தா காபி மற்றும் சாரதி காபி ஆகியவற்றை நடத்தி வந்தனர். நரசுஸ் காபி நிறுவனத்தை வாங்கிய பிறகு, என்னுடைய அப்பாவும் அவருடைய சகோதரர்களும் நிறுவனத்தின் தொழிலை மேலும் மேலும் வளர்த்தனர்” என்று நரசுஸ் காபி நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் சிவானந்தம் குறிப்பிடுகிறார்.

வழக்கமாக குடும்ப தொழில்களில் இருக்கும் சிக்கல்கள் நரசுஸ் காபியிலும் தலைதூக்கியதால் சில பிரிவினைகள் நடந்தன. 2006 ஆம் ஆண்டு, நரசுஸ் காபியின் முழு பொறுப்பையும் சிவானந்தம் எடுத்துக்கொண்டார். பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு பங்குதாரர்களிடமிருந்து வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (limited company) மாற்றபட்டது. “நாங்கள் 2002 ஆம் ஆண்டு இன்ஸ்டன்ட் காபி உற்பத்தி செய்ய ஆரம்பித்தது மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது” என்கிறார் சிவானந்தம். அதன்பிறகு அந்த நிறுவனம், தற்போதுள்ள ஆலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சேலத்தில் அமைந்துள்ள இன்ஸ்டன்ட் காபி ஆலையில் சுமார் 60 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த முதலீடு, வருவாயை இருமடங்காக்கியது .

P Sivanantham, Chairman

அந்த நேரத்தில், இன்ஸ்டன்ட் காபி சந்தையானது நெஸ்லே, யூனிலீவர், டாடா காபி மற்றும் CCL ப்ராடக்ட்ஸ் (இந்தியா) போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலும், உள்நாட்டு பெரு நிறுவனங்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. “நாங்கள் சந்தையில் 5 வது போட்டியாளர்களாக களமிறங்கினோம். அப்போது எங்களை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டன” என சிவானந்தம் நினைவுகூர்ந்தார். “எங்களுக்குள் ஒரு வித பயம் இருந்தது. அந்த பயமே நாங்கள் கவனமாக இருப்பதற்கும், தோற்காமல் இருக்கவேண்டும் என்பதற்கும் எங்களுக்கு உத்வேகமாக அமைந்தது” என்றார். அதன் காரணமாகவே, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 12 மாதங்களிலேயே புதிய ஆலையில் நரசுஸ் உற்பத்தியை தொடங்கியது.

தற்போது, ​​இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 9,000 மெட்ரிக் டன் வறுத்து அரைக்கப்பட்ட காபி (ஃபில்டர் காபி) மற்றும் 8,000 மெட்ரிக் டன் இன்ஸ்டன்ட் காபி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் தற்போதைய ஆண்டு வருவாய் ரூ. 641 கோடியாக இருக்கிறது; இதில் 50 சதவீதம் உள்நாட்டு விற்பனை மூலமாகவும், மீதமுள்ளவை ஏற்றுமதி மூலமாகவும் கிடைக்கின்றன.

எல்லைகளை தாண்டும் மனம்…

S Srudheep, Managing Director

கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த ‘நரசுஸ்’ (Narasu’s) திட்டமிட்டுள்ளது. “இப்போது எங்களிடம் விநியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களின் வலுவான கட்டமைப்பு உள்ளது. தென்னிந்தியப் பகுதியில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம். இந்த சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கைப்பற்ற விரும்புகிறோம். இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒவ்வொரு நவீன சமையலறையிலும் உண்மையான தென்னிந்திய காபி அனுபவத்தைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் தெளிவான நோக்கமாகும்,” என்று அதன் நிர்வாக இயக்குநர் ஸ்ருதீப் எஸ் (Srudheep S) கூறுகிறார்.

நரசுஸ் (Narasu’s) நிறுவனம் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்தி வருகிறது; இதன் மூலம் தனது மொத்த விற்பனை கட்டமைப்பில் ஆன்லைன் விற்பனையின் பங்கை 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் 18 முதல் 20 சதவீத வருவாய் வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ள இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ.1,000 கோடி வருவாயை எட்டும் இலக்கையும் நிர்ணயித்துள்ளது. பாரம்பரிய காபி மற்றும் இன்ஸ்டன்ட் காபி என ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிகவும் விரும்பப்படும் பிராண்டாகத் இருக்கும் இந்நிறுவனம், இப்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காபி பிராண்டாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.

வளர்ச்சிக்கான அடித்தளம்

இந்தியாவின் காபி உற்பத்தி பெரும்பாலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் குவிந்துள்ளது. இந்த மாநிலங்கள் இணைந்து நாட்டின் மொத்த காபி உற்பத்தியில் சுமார் 96 சதவீதத்தை வழங்குகின்றன. இதில் 2025–26 பருவத்திற்கான (பூப்பிடிப்புக்கு பிந்தைய மதிப்பீடு) சுமார் 2,80,275 மெட்ரிக் டன் உற்பத்தியுடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளன.

இந்திய காபி வாரியத்தின் (Coffee Board of India) சார்பில் CRISIL நிறுவனம் 2023-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, நாட்டின் காபி நுகர்வு 2012-ஆம் ஆண்டில் 84,000 டனில் (பச்சை காபி கொட்டை சமமான அளவு) இருந்து 2023-ஆம் ஆண்டில் 91,000 டனாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு, வீடுகளில் காபி அருந்தும் பழக்கம் அதிகரித்தது, இன்ஸ்டன்ட் காபியின் பயன்பாடு விரிவடைந்தது மற்றும் நாடு முழுவதும் கஃபே கலாசாரம் வேகமாக பரவியது ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

AI generated

நாட்டின் மொத்த காபி நுகர்வில் 75–80 சதவீதம் தென்னிந்தியாவிலேயே நடைபெறும் நிலையில், அதில் தென்னிந்தியாவே ஆதிக்கம் செலுத்திவருகிறது. இருந்தாலும், முன்னணி காபி பிராண்டுகள் தங்களது விற்பனையை விரிவுபடுத்தி வருவதால், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் காபி அருந்தும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெருநகரங்கள் மற்றும் டயர்-1, டயர்-2 நகரங்களில் கஃபேக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காபி நுகர்வில் நகர்புறங்கள் முன்னிலையில் உள்ளன. எளிதில் தயாரிக்க முடிவதாலும், அதற்கான செலவு குறைவாக இருப்பதாலும் இந்தியாவின் மொத்த காபி நுகர்வில் சுமார் 65 சதவீதம் இன்ஸ்டன்ட் காபி வகைகளாக இருக்கின்றது.

(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)

Click here for original

Related Posts