வணிகம்

ரூ. 300 கோடி முதலீடு செய்ய திட்டம்: வீல்ஸ் இந்தியா

வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது  பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீவத்ஸ் ராம், “2026-ஆம் நிதியாண்டில் வீல்ஸ் இந்தியா ‘ஏர் சஸ்பென்ஷன்’ வணிகத்தில் காணப்பட்ட வலுவான இரட்டை இலக்க வளர்ச்சிக்கு, வாகனத்தில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, EV பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக அமைந்தன” என்றார்.

மேலும், காற்றாலைத் துறைக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் வணிகத்தில் இந்த ஆண்டு வளர்ச்சி இருக்கும் என்று ஸ்ரீவத்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
கடல்சார் பிரிவில் கிடைத்த புதிய வாய்ப்புகளால் கடந்த ஆண்டு இவ்வணிகம் 14 சதவீத வளர்ச்சி கண்டதாகவும், அந்த துறையில் தொடர்ந்து முதலீடு செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

வீல்ஸ் இந்தியா துணை நிறுவனமான ‘WIL Car Wheels Ltd’, நல்ல வளர்ச்சியையும் மேம்பட்ட லாபத்தையும் பதிவு செய்திருப்பதாகவும், அதே வளர்ச்சி இந்த ஆண்டிலும் தொடருமென எதிர்பார்பதாகவும் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்தார்.

டிராக்டர், காற்றாலை, ஹைட்ராலிக் சிலிண்டர்கள் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய பிரிவுகளில் முதலீடு செய்வதற்காக, இந்த ஆண்டு சுமார் ரூ. 300 கோடியை ஒதுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கட்டுமான உபகரணங்கள் பிரிவில் முன்னணியில் இந்நிறுவனம் இருப்பதாகவும், அதே நிலையை உலகளவில் விவசாய டிராக்டர் பிரிவிலும் எட்ட விரும்புவதாகவும் ஸ்ரீவத்ஸ் ராம் கூறினார்.

கடந்த ஆண்டில் ரூ. 5,124 கோடி வருவாயில் ரூ. 139 கோடி நிகர லாபத்தைப் வீல்ஸ் இந்தியா பதிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts