17 ஆண்டுகள் சிஎஸ்கே அணியுடன் பயணித்த பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீபன் பிளெமிங் அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னாலே நம் மனதிற்கு வருவது ஒன்று தல தோனி, மற்றொன்று சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங். ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணித்து வருபவர்கள் இந்த இருவர்தான். 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டீபன் பிளெமிங் அந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டார். அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சிஎஸ்கே நிர்வாகம் அடுத்த ஆண்டு, அதாவது 2009 ஆம் ஆண்டு, அவரை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.
5 முறை ஐபிஎல் கோப்பை, 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை, பல ஃபேர்ப்ளே விருதுகள் என ஸ்டீபன் பிளெமிங்கின் வழிகாட்டுதலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஏராளமான சாதனைகளைப் படைத்தது.
இதன் மூலம், சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பேவரட் கோச்சாக மாறினார் பிளெமிங். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் “டாடீஸ் ஆர்மி” என்று அழைக்கப்பட்ட சிஎஸ்கே, தற்போது இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றதால் “கிட்ஸ் ஆர்மி” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மாற்றம் பிளெமிங்கிற்கு புதிய சவாலாக அமைந்தது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசை, பவுலிங், கேப்டன்சி என பல மாற்றங்கள் நடைபெற்றன. ஆனால் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முறைகூட சிஎஸ்கே அணி பிளேஆஃப்ஸ்க்கு தகுதி பெறவில்லை. இதனால் ருதுராஜின் கேப்டன்சி மற்றும் பிளெமிங்கின் கோச்சிங் மீது ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர்.

இந்த நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹுருன் வெளியிட்ட ‘இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு அணிகள் 2026’ பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.18,400 கோடி முதல் ரூ.20,700 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே, வெறும் ஒரு கிரிக்கெட் அணியாக மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு பிராண்டுகளில் ஒன்றாகவும் இருப்பதை காட்டுகிறது.
18 ஆண்டுகளாக சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங், இருவரும் தங்கள் கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியை புதிதாக கட்டமைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தற்போது சிஎஸ்கே நிர்வாகத்தின் மீது உள்ளது. ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அந்த OG சிஎஸ்கேவை மீண்டும் உருவாக்கி, ஐபிஎலில் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எளிதான காரியம் அல்ல. அதற்கு, வீரர்கள் முதல் பயிற்சியாளர் வரை பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.









