பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை அதிதி ராவ் ஹைதாரி, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
பரதநாட்டியக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கி, மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்றவர் அதிதி ராவ். அதன் பிறகு ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சைக்கோ’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்தார். நடிகர் சித்தார்த்தை மணந்த இவர், தற்போது இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி யாரோ சிலர் வாட்ஸ்அப் மூலம் போலியாகப் பேசிக்கொண்டு, குறிப்பாகப் புகைப்படக் கலைஞர்களிடம் ‘ஃபோட்டோஷூட்ஸ்’ குறித்துப் பேசி வருவதாக அதிதி ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு தான் தனது தனிப்பட்ட மொபைல் எண்ணை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்றும், தனது மேனஜர் மூலமாகதான் எதுவாக இருந்தாலும் தொடர்புகொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த போலி எண் என்னுடது இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலியான வாட்ஸ்அப் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும், அனைத்துப் பணித் தொடர்புகளும் தனது குழு மூலமாகவே நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளார்.
மோசடி செய்பவர் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையே வாட்ஸ்அப் படமாக வைத்திருப்பதற்கான ஆதார ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் போலிச் செய்தி குறித்துத் தனக்குத் தெரியப்படுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மோசடி முயற்சி தற்போது இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








