பொது

AI ஆல் செய்ய முடியாத வேலைகள்? வேலையிழப்புக்கு இடையிலும் நம்பிக்கை தரும் ஆய்வறிக்கை…

எங்கும் ஏஐ (AI), எதிலும் AI என்பதுபோல ஒவ்வொரு துறையிலும் AI ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இது ஒரு புறம் நல்ல விஷயம் என்றாலும், வேலையிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக IT துறையில் வேலையிழப்பு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய காலகட்டத்திலேயே இப்படி எனில், இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் நிலைமை என்ன ஆகும் என்ற கவலை அதிகரித்துள்ளது. IT துறையினர் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் வேலையிழப்புகள் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

AI-யால் எந்தெந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு அதிகரிக்கும், எந்த துறைகள் எல்லாம் பாதிக்கப்படாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சரி, AI-யால் மாற்ற முடியாத வேலைகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

நம்முடைய எதிர்காலம் நாம் பயப்படுவது போல அவ்வளவு இருட்டாக இல்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, சில வேலைகளை AI-யால் ஒருபோதும் முழுமையாக மாற்றிவிட முடியாது. அவை, மனிதர்களின் நேரடி ஈடுபாடும், உடல் உழைப்பும் தேவைப்படும் வேலைகள்.

உதாரணத்திற்கு… ஒரு செவிலியரின் அரவணைப்பு, ஒரு தீயணைப்பு வீரரின் துணிச்சல், ஒரு எலக்ட்ரீஷியனின் துல்லியமான வேலை, ஒரு கப்பல் பொறியாளரின் அனுபவம்… இவற்றையெல்லாம் ஏஐ-யால் செய்ய முடியுமா? முடியாது. அதேபோல, தச்சு வேலை, கட்டிடத் தொழிலாளர்கள், மெக்கானிக்ஸ் போன்ற வேலைகளுக்கும் மனிதர்களின் உடல் உழைப்பு மிக அவசியம். ஏனென்றால், இந்த வேலைகளில் ஒரு இயந்திரத்தால் கொடுக்க முடியாத ஒரு நுட்பமும், மனிதத் தொடர்பும் இருக்கிறது.

சரி, AI அச்சுறுத்தலை எப்படிச் சமாளிப்பது?

இதோ இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன.

ஒரு புறம் அதிகரித்து வரும் AI ஆதிக்கத்தின் மத்தியில், மறுபுறம் ஊழியர்கள் தங்களது திறனையும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை இழப்பிலிருந்து தப்பிக்க முடியும்.

இது AI-யால் மட்டும் அல்ல, எந்த ஒரு பிரச்னையாலும் செய்யப்படும் பணி நீக்கத்திலிருந்து தப்பிக்க உதவும். ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளாகவே IT துறை, StartUp-களில் பணி நீக்கம் என மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் அரங்கேறி வருகின்றன.

ஆக, இது போன்ற கடினமான சூழல்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் ஒவ்வொருவரும் அவரவர் திறமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது எப்போதும் ஒரே வருமானத்தை மட்டும் நம்பியிருக்க கூடாது. இது ஒரு வேளை திடீரென வேலையே பறிபோய் விட்டாலும், அதிலிருந்து தப்பிக்க உதவிகரமாக இருக்கும்.

மேலும் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கு மத்தியில், வேலை இழப்பு காப்பீடு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் வேலை இழப்பு காப்பீடு என்பது தனிப்பட்ட ஒரு திட்டமாக இல்லை. எனினும் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் காப்பீடுகள் மூலமாக வேலை இழப்பினால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வழிகள் உண்டு.

தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில் இருக்கிறது. நம் திறன்களை வளர்த்துக்கொள்வோம், நிதி பாதுகாப்பை உறுதி செய்வோம். எந்தச் சவாலையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

Related Posts