இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. கோமாளி, லவ் டுடே, டிராகன் என அடுத்தடுத்து இயக்குநராகவும் நடிகராகவும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த பிரதீப் ரங்கநாதன், லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் முன்னணி நடிகர் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், யாரும் எதிர்பாராத வகையில் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ‘தீமா தீமா’ ஏற்கனவே வெளியாகி இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை நடிகை நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. ஹீரோ தன்னுடைய காதலுக்காக டைம் ட்ராவல் செய்யும் வகையில் கதைக்களம் இருக்குமென தகவல் வெளியானது. இந்நிலையில், லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவனும், பிரதீப் ரங்கநாதனும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நிலையில், இந்த படமும் அந்த வரிசையில் இணையவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.









