2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள், மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
IAS, IPS போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் தமிழக மாணவர்களில் 1000 பேருக்கு ‘நான் முதல்வன்’ திட்டத் தின் கீழ், பயிற்சியும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கென தனியாக மதிப்பீட்டு தேர்வும் நடத்திவருகிறது.
அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்துடன் (AICSCC ) ஒருங்கிணைந்து தமிழக அரசால் இந்த ஊக்கத்தொகைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதனால், சென்னை அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம், கோவை மற்றும் மதுரையில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கு, தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள் www. naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 10-ம் தேதிவரை விண்ணப்பக்கலாம். மேலும், மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் (syllabus) மற்றும் விதிமுறைகள் அனைத்தும் நான் முதல்வன் இணையதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.








