வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் முதல் காலாண்டு லாபம் ரூ.85 கோடியாக அதிகரிப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், 2026–2027 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.85 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தைவிட 37% அதிகமாகும்.

சிறு அளவிலான கடன்கள் மற்றும் மலிவு விலை வீட்டுவசதிக் கடன்கள் உள்ளிட்ட கடன்கள், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.83 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.180 கோடியாக உயர்ந்துள்ளன.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் ரூ.1,488 கோடியாக இருந்த நிலையில், இந்த காலாண்டில் 12% அதிகரித்து ரூ.1,665 கோடியாக உயர்ந்துள்ளது. 2026 ஜூன் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்து மதிப்பு 11% உயர்ந்து ரூ.20,325 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணன் பேசியது, “சிறிய நகரங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால், சொந்த வீடு வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு வலுவான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. இதனால் நிறுவனத்தின் வணிகப் பிரிவு வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள், முதல் காலாண்டில் நல்ல லாபத்தைப் பதிவு செய்ய உதவியுள்ளன.

குறிப்பாக, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் மலிவு விலை வீட்டுவசதிக் கடன்களுக்கு அதிக வாய்ப்புள்ளதால், சிறிய நகரங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு மேலும் 25 கிளைகளை திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வீட்டுக் கடன்கள், மனைக் கடன்கள், வீட்டை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான கடன்கள், மலிவு விலை வீட்டுவசதிக் கடன்கள், சொத்து மீதான கடன்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான சிறு அளவிலான கடன்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

Related Posts