சென்னையில் FICCI Digital Disruption and Transformation International Summit & Exhibition 2026 நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர் குமார், தமிழ்நாட்டில் “வெற்றி தமிழன் நாடு” என்ற AI நகரம் உருவாக வேண்டும் என்ற எதிர்கால திட்டம் குறித்து பேசினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நெறிமுறைகளுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான வலுவான AI சூழலை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதை சாத்தியமாக்க பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்துறைகள் இணைந்து செயல்படவேண்டுமென அவர் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் AIயின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகளாவிய வளர்ச்சியை தமிழ்நாடு அடைய அனைத்து சாத்தியகூறுகளும் இருக்கும் நிலையில், டிஜிட்டல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை கொள்கை வகுப்போர், தொழில்முனைவோர், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் உணர்ந்து வருவதாக அவர் கூறினார்.









