தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, அவர்களுக்கு மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டுள்ளது.
அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்ப வேண்டியிருப்பதால், உணவு சமைத்தல், சாப்பிடுதல் போன்ற சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இவர்களின் உழைப்பைப் போற்றும் விதமாகவும், இந்தக் சிரமங்களைக் குறைக்கும் நோக்கிலும் அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 29,455 தூய்மைப் பணியாளர்களுக்குத் தொடங்கப்பட உள்ளது. இதன் பிறகு, மாநிலத்தின் மற்ற நகரங்களுக்கும், ஊர்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வேளை உணவுக்கான நேர அட்டவணை:
காலை உணவு: அதிகாலை 5.30 முதல் 6.00 மணி வரை.
மதிய உணவு: பிற்பகல் 1.30 முதல் 2.00 மணி வரை.
இரவு உணவு: இரவு 9.30 முதல் 10.00 மணி வரை.
இந்த உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த, அடுத்த 3 வருடங்களுக்குச் சுமார் ரூ.186.94 கோடி செலவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. உணவின் தரத்தையும், விநியோகப் பணிகளையும் முறையாகக் கண்காணிக்க, சென்னையில் ஒரு சிறப்பு அதிகாரியாகத் ‘திட்ட மேலாண்மை ஆலோசகர்’ ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
சமீபத்தில், தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு, நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடிய நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








