தமிழக சட்டசபையில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “வறுமையை ஒழிக்கும் போரை நாம் துவங்கி உள்ளோம். ஏஐ உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். உணவு உற்பத்தியில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது.
பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் 10,549 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம் கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்கும். தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் கட்டப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும். தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.வனவிலங்குகள் பாதுகாக்க 6 புதிய சரணாலயங்கள் அமைக்கப்படும். பூவிருந்தவல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்” என்றார்.
நிதி ஒதுக்கீடு பட்டியல்:
1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு
2. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
3. உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
4. சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
5. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு
6. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு
7. நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு
8. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
9.தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
10. நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு
11. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22.090 கோடி ஒதுக்கீடு
12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
13. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு
14. நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
15. எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
16. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.
17. உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு
18. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.17,086 கோடி ஒதுக்கீடு
19. சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
20. கால்நடை, மீன்வளம், பால்வளத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு
21. வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு
22. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை க்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு
23. பொதுப்பணி துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு
24. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு
25. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு
26. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு









