தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், வெறும் ரூ.10 க்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக தனது 96 வயதில் காலமானார். 1957 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ பணி செய்துவந்த இவர், ஆரம்பக்காலத்தில் 2 ரூபாய் கட்டணம் வாங்கியிருக்கிறார். பின்னர் 1997 ஆம் ஆண்டு இந்த கட்டணத்தை 5 ரூபாயாக மாற்றினார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து, 2007 ஆம் ஆண்டு கட்டணத்தை 10 ரூபாயாக மாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவர் செய்த சேவை பலரை வியக்கவைத்தது. தன்னுடைய மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கியிருக்கிறார். அதேசமயத்தில், தன்னுடைய கட்டிடத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளுக்கும் 3 மாதம் வாடகை, மொத்தம் 9 லட்சம் ரூபாயையும் வாங்காமல் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் இது வெகுவாக பாராட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 68 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை பகுதி மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் ரத்தினம் இதுவரை 65,000 சுகப் பிரசவங்கள் செய்துள்ளார். பல ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய் கூட வாங்காமல் இலவசமாக மருத்துவம் செய்து வந்தார். இவரை அதிசய டாக்டர் என்று பலர் சொல்வதுண்டு. இந்நிலையில், தனது 96வது வயதில், வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். அம்மா, மகள், பேத்தி என்று மூன்று தலைமுறையினருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ரத்தினம் பிள்ளையின் பிரிவு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.









