பழைய சோறு உடம்புக்கு நல்லது.. ஆனால் எந்த அளவுக்கு நல்லது எனத் தெரியுமா? அதை மக்களுக்கு அறிவியல் பூர்வமா நிரூபிக்கவே ஸ்டான்லி மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஆய்வில் பழைய சோற்றின் நன்மைகள் குறித்து பல அறிவியல் பூர்வமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
அரசி சாதம் நொதித்துப் புளிப்பு தன்மை அடைந்த பின்னர், அதன் சத்துகளும், மருத்துவ குணமும் அதிகரிப்பதை ஸ்டான்லி மருத்துவமனை ஆய்வு உறுதி செய்துள்ளது.
செரிமான மண்டலத்திற்கு அருமருந்து..
செரிமான மண்டலத்தை சீராக இயங்கவைக்க, பல நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்ளத் தேவைப்படும் ப்ரோபையாட்டிக்ஸ் (Probiotics) பழையசோற்றில் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. மேலும், பழைய சோற்றை தொடர்ந்து காலை எடுத்து வந்தால், அது ஜீரண சக்தியை அதிகரிக்கும், குடல் அழற்சியை குறைக்கும், IBS போன்ற குடல் சிக்கலுக்கு நிவாரணம் தரக்கூடியது, அல்சரை குறைப்பது போன்றவை இந்த ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல மடங்கு இரும்பு சத்து..
சமைக்கப்பட்ட 100 கிராம் அரிசியில் 3.4 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. அதே சமைத்த அரிசியில், நீரை ஊற்றி புளிக்கவைத்தால், அதில் 73.91 மில்லி கிராம் இரும்பு சத்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது சராசரியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு நாளில் தேவைப்படும் இரும்பு சத்தை விட 2 மடங்கிற்கும் அதிகம். இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், இளம்பெண்கள், ரத்தசோகை (Anaemia) பாதிப்புள்ளோர் என பலருக்கும் பயனளிக்கக்கூடிய இயற்கை உணவாகக் பழைய சோறு இருக்கிறது.

நீரிழிவை கட்டுப்படுத்த உதவுகிறது..
அரிசியின் கார்போஹைட்ரேட் அமைப்பு பழைய சோற்றில் மாறுகிறது. இதனால், உடலில் சர்க்கரை உரியப்படுவது மெதுவாக நடக்கிறது. இதன் மூலம், ரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென உயர்வது குறைகிறது. இதன் காரணமாக, டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க பழைய சோறு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பழைய சோற்றின் மற்ற பயன்கள்..
200-க்கும் மேற்பட்ட பயனுள்ள உயிர் செயல் சேர்மங்கள் (bioactive compounds) பழைய சோற்றில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவை செல்கள் வயதாவதை தடுக்கும், நீண்டகால நோய்கள் உருவாவதைக் கட்டுப்படுத்த உதவும் என தெரியவந்துள்ளது.
அரசின் கவனத்தை ஈர்த்த பழைய சோறு
இந்த ஆய்வு முடிவுகள், தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் வயதினரிடையே ரத்தசோகை மற்றும் வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கும் நோக்கில், பழைய சோற்றை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பழைய சோறு, பல நோய்கள் வருவதை தடுக்குமே தவிர, அது எந்த நோய்க்கும் மருந்தல்ல என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.









