தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு – 2026, பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.22,794 கோடி மதிப்புள்ள 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதாக கூறினார். சாகசச் சுற்றுலா, கடலோர சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா உள்ளிட்ட 12 வகையான சுற்றுலாவை உள்ளடக்கிய “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023” வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை அதிகரிக்க அரசு பல சலுகைகள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முதல் அறிவிப்பாக, தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டை உலகிற்கு காட்ட “தமிழ் பினாலே” நடத்தப்படும். இரண்டாவது அறிவிப்பாக, மாமல்லபுரத்தில் ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுலா வசதிகள் உருவாக்கப்படும். மூன்றாவது அறிவிப்பாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் புதிய சுற்றுலா இடங்கள் உருவாக்கப்படும்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தங்குமிடங்கள், தீம் பார்க், கேம்பிங் வசதிகள் போன்றவை உருவாக்கப்படும். இதனால் தமிழ்நாடு முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.
இதில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், “இதுவரை இந்தியாவில் இல்லாத பல புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த உலக சுற்றுலா உச்சிமாநாடு, தமிழக சுற்றுலாவுக்கு புதிய முதலீடுகள் மற்றும் சர்வதேச வாய்ப்புகளை உருவாக்கும்” என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.







