பொது

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் காட்டப் போகும் நட்சத்திரப் பாடகர்கள்!

நடிகர் விஜய் தனது திரைப் பயணத்தின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த விழாவில், தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகர்களான சைந்தவி, ஆண்ட்ரியா ஜெரேமியா, திப்பு, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளதால், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, அவரது திரைப் பயணத்தின் கடைசிப் பொது மேடையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பல பாடகர்கள் பங்கேற்க்கவுள்ளனர். குறிப்பாக, விஜய் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய பிரபலப் பாடகர்களான ஆண்ட்ரியா ஜெரேமியா, திப்பு, அனுராதா ஸ்ரீராம், சைந்தவி ஆகியோர் நேரடி இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர்.

‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘கூகிள் கூகிள்’ பாடல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஆண்ட்ரியா, இந்த மேடையிலும் தனது பாடல்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகிறார்.

விஜய்க்கு பல வெற்றி ‘இண்ட்ரோ’ பாடல்களைக் கொடுத்த திப்பு, தனது பவர்ஃபுல்லான குரலில் ‘திருமலை’ படத்தின் ‘தாம் தக்க தீம் தக்க’, ‘கில்லி’ படத்தின் ‘சூரத் தேங்கா’ போன்ற பாடல்களைப் பாடி, ரசிகர்களை மீண்டும் ஆட்டம்போடவைக்க தயாராகிவருகிறார்.

தமிழ் இசையுலகில் பல காலங்களாகத் தங்களது இனிமையான குரலால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அனுராதா ஸ்ரீராம் மற்றும் சைந்தவி ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க உள்ளனர்.

இந்தப் பிரமாண்டமான நிகழ்வு, விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் இசையை விரும்புபவர்களுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கபோகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு அரசியல் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Related Posts