பொது

வளர்ச்சி பாதையில் தென்னிந்திய திரையுலகம்… ஆனால் இதை கவனிக்கிறது இல்லை

தென்னிந்தியத் திரையுலகம் இன்று உலகளவில் முக்கிய திரைப் படங்களை கொடுத்து வருகிறது. ‘பாகுபலி’, ‘கேஜிஎப்’ போன்ற படங்கள் வசூலிலும் தரத்திலும் இந்தி திரையுலகை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கு. ஆனால் இந்த பிரமாண்ட வளர்ச்சிக்குப் பின்னால், பலரும் கவனிக்காத ஒரு முக்கிய குறை இருக்கின்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அது – திரைத்துறையில் காப்பீடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான்.

நாம் வாழும் வீடு, ஓட்டுகின்ற வாகனம், உடல்நலம் என வாழ்க்கையின் ஒவ்வொன்றுக்கும் காப்பீட்டுகளின் அவசியம் அதிகரித்து வருகிறது. ஆனால் பல கோடிகள் முதலீடு செய்யப்படும் திரைப்படங்களுக்கு அந்த பாதுகாப்பு பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை. ஒரு படம் என்பது தயாரிப்பாளரின் பணம் மட்டும் சார்ந்தது இல்லை; நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் வாழ்வாதாரமும் அதில் அடங்கி இருக்கு.

சில சமயங்களில் படப்பிடிப்பின்போது நடிகர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு, விபத்தில் காயம், ஏன் உயிரிழப்பு கூட ஏற்படலாம். இயற்கை பேரிடர்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால் ஒரு திரைப்படம் பாதியில் நின்றுவிடலாம். ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தானாலே தயாரிப்பாளருக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளரை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதுதான் திரைத்துறை காப்பீடு.

உதாரணமாக நடிகர் மோகன்லால் நடித்த “மலைக்கோட்டை வாலிபன்” படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சமயம் தயாரிப்பாளரை காப்பாற்றியது அவர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காப்பீடு. அதேபோல் கடும் மழையால் பாதிக்கப்பட்ட “பாகுபலி” படப்பிடிப்பும், காப்பீட்டால் பெரிய இழப்பிலிருந்து தப்பியது. “புறம்போக்கு” படப்பிடிப்பில் கேமரா கோளாறால் ஏற்பட்ட தாமதமும், “கபாலி” படத்தின் அரங்கு வெள்ளத்தில் சேதமடைந்த சம்பவமும் என இது எல்லாவற்றிலும் தயாரிப்பாளர்களை காப்பாற்றியது திரைப்பட காப்பீடுதான்.

அதே நேரத்தில், காப்பீடு இல்லாதால் நிறைய படங்கள் பல கோடி இழப்பை சந்தித்து இருக்கு. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென காலமானபோது, காப்பீடு செய்யாத தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கான இழப்பை சந்தித்தது. அதேபோல் இந்தியன்-2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் நடந்தாலும், காப்பீடு இருந்ததால் உரிய இழப்பீடு வழங்கப்பட்டது.

இன்று தென்னிந்தியத் திரையுலகில் சுமார் 50% தயாரிப்பு நிறுவனங்களுக்கே இந்த விழிப்புணர்வு இருக்கு என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தென்னிந்தியத் திரையுலகம் பாதுகாப்புடன், வளர்ச்சியுடன் முன்னேற இந்த காப்பீடுகள் ரொம்பவே முக்கியம்.

Related Posts