இசைஞானி இளையராஜா அவர்கள், 80-கள், 90-கள், 2கே (2K) என மூன்று தலைமுறை ரசிகர்களுக்கும் பிடித்தமான, என்றென்றும் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர். அவரது மகள், பாடகி பவதாரணி கடந்த ஆண்டு (ஜனவரி 25-ஆம் தேதி) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இப்போது, அவர் தன் மகளின் கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு உன்னதச் செயலைச் செய்திருக்கிறார். அதாவது, பவதாரணிக்குச் சிறு குழந்தைகளுக்காக ஓர் ஆர்கெஸ்ட்ரா (இசைக் குழு) ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக, ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ (Bhavatha Girls Orchestra) என்ற பெயரில், பெண் பிள்ளைகளுக்கான பிரத்யேக இசைக் குழுவை ஆரம்பிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
15 வயதுக்குட்பட்ட திறமையான பாடகிகள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இசைக் குழுவில் சேர ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் திறமை குறித்த விவரங்கள், பயோடேட்டா மற்றும் தொடர்பு விவரங்கள் அனைத்தையும் allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு இளையராஜா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.









