பொது

1500 ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரம் சொன்ன காலநிலை மாற்றம்!

காலநிலை மாற்றம் என்பது இந்நூற்றாண்டின் தீர்க்க முடியாத சிக்கலாக உருவாகியுள்ளது. அதீத வெயில், பருவ மழையில் மாற்றம், அதிக வெப்பம், அதிக மழை என அடுக்கடுக்காக பல சிக்கல்களை காலநிலை மாற்றத்தால் அனைத்து உயிரினங்களும் சந்திக்கின்றன. புவி வெப்பமாதல் உட்பட பல காரணங்கள் இதற்காக சொல்லப்படுகிறது. ஆனால், காலநிலை மாறினால் ஒரு நிலப்பரப்பு எப்படி மாறும் என்பது குறித்து 1500 ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளும் இடம்பெறும் ஒரே காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கிறது. ஐந்திணைகளின் தன்மை, அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முறை ஆகியவற்றை சிலப்பதிகாரத்தில் வரும் பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். ஒரு திணையின் இயல்பு திரிந்தால் அது என்னவாகும் என்பது குறித்து ஒரு பாடல் வருகிறது.

மலையும் அது சார்ந்த நிலப்பரப்பும் (குறிஞ்சி), காடும் அது சார்ந்த நிலப்பரப்பும் (முல்லை) தன்னுடைய இயல்பு மாறினால் அது பாலை நிலம் போல வறண்டு காணப்படும் என்று அந்த பாடல் கூறுகிறது. இந்த வரிகளை நாம் இப்போதைய காலநிலை மாற்றத்துடன் பொருத்திப் பார்த்தால், இளங்கோவடிகள் கூறும் காலநிலை மாற்றம் புலப்படும்.

பல காடுகளில் காலநிலை மாற்றத்தால் காட்டு தீ ஏற்பட்டு, காடுகள் முற்றிலுமாக எரிந்து அவை முல்லையிலிருந்து பாலை நிலமாக மாறியிருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்த சில பகுதிகள் இப்போது பாலைவனமாகவும், மலையாகவும் இருக்கின்றன. சஹாரா பாலைவனமும், இமையமலையும் அதற்கு மிகச்சிறப்பான உதாரணம். கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் பல சஹாராவில் கிடைத்துள்ளன. அதேபோல இமய மலையும் 50 லட்சம் வருடத்திற்கு முன்பு டெதிஸ் கடலாக இருந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி நிலப்பரப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமடையும் என்பதை 1500 ஆண்டுகளுக்கு முன்பு சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியிருப்பது இன்றைய தலைமுறையினரை வியக்கவைக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts