பங்கு சந்தை

6.85% லாபம் கொடுத்த எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட்!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓவான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், 6.85% லாபத்துடன் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும். மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சுமார் 15.3 சதவீத பங்குகளை எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், ரூ.12.51 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளையும் நிர்வகித்து வருகிறது. சுமார் ரூ.1.26 லட்சம் கோடி சந்தை மதிப்பு உள்ள இந்த நிறுவனத்தில், எஸ்பிஐ 61.86 சதவீதமும், Amundi 38.14 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட செபியிடம் அனுமதி பெற்றது. இந்த ஐபிஓ முழுவதும் OFS என்பதால், எஸ்பிஐ மற்றும் Amundi அகிய இரு நிறுவனங்களுன் தங்களிடம் உள்ள 10 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த ஐபிஓவில் முதலீடு செய்ய ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒரு பங்கின் விலை ரூ.545 முதல் ரூ.574 வரை நிர்ணயிக்கப்பட்டது.

ஐபிஓ தொடங்கிய முதல் நாளிலேயே முழுமையாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது. இறுதி நாளில் 41 மடங்குக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்தன. இதில், நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 140.11 மடங்கு அதிகமாக முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அதேபோல், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் 22.51 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் 3.6 மடங்கும் அதிகமாக சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 21ஆம் தேதியான இன்று, என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகிய இரு பங்குச்சந்தைகளிலும் 6.85 சதவீத லாபத்துடன் ரூ.613.30-க்கு பட்டியலிடப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஐபிஓ, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைவிட குறைவான லாபத்துடனேயே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்தில் முக்கிய ஐபிஓக்களான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், ஜியோ மற்றும் என்எஸ்இ ஆகியவை அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டன. இந்த நிலையில், எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஐபிஓ போதுமான லாபத்தை வழங்காததால், அடுத்த இரண்டு ஐபிஓக்கள் மீதான எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related Posts