பங்கு சந்தை

மீண்டும் 5-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

உலக பங்குச் சந்தைகளின் மொத்த சந்தை மதிப்பு தரவரிசையில், மீண்டும் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

கடந்த சில மாதங்களாக ஏஐ மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக, உலக செமிகண்டக்டர் உற்பத்தியில் சுமார் 26% பங்கைக் கொண்டுள்ள TSMC நிறுவனத்தின் பங்குகளில் முதலீடுகள் அதிகரித்தன. இதன் காரணமாக தைவான் பங்குச் சந்தையின் மதிப்பு உயர்ந்து, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தைப் பிடித்தது.

அதேபோல், தென் கொரியாவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களான Samsung Electronics மற்றும் SK Hynix நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததால், அந்த நாட்டின் பங்குச் சந்தை மதிப்பும் அதிகரித்து 6-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் விளைவாக இந்தியா 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக உயர்ந்து வந்த AI மற்றும் செமிகண்டக்டர் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் தற்போது லாபத்தை எடுக்க பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக அந்தத் துறை சார்ந்த பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுவே தைவான் மற்றும் தென் கொரிய பங்குச் சந்தைகளின் மதிப்பு குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் தென் கொரிய பங்குச் சந்தை 4.7% மற்றும் தைவான் பங்குச் சந்தை 2.3% சரிவைச் சந்தித்தது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்ததும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அரசு கடன் பத்திர முதலீடுகளுக்கான வரியை ரத்து செய்ததும், இந்திய பங்குச் சந்தை மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு 5.05 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனால் 7 ஆம் இடத்தில் இருந்த இந்தியா மீண்டும் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Posts