சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், மாநகராட்சியின் 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள் 14 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ’உழைப்போர் உரிமை இயக்கம்’ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “5,6 ஆகிய இரண்டு மண்டலங்களில் பணியாற்றும் 2,042 நிரந்தர பணியாளர்கள் வேறு மண்டல பணிகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவன விதிகளின்படி புதிதாக 1,953 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ”தூய்மைப் பணியாளர்கள் யாரும் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன.
தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2,000 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி கே.சுரேந்தர் இன்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், “சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி கலந்து பேசி தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.








