பொது

ரவி மோகனின் ‘BRO CODE’ டைட்டிலுக்கு சிக்கல்!

நடிகர் ரவி மோகனின் நடிப்பில் ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’, மற்றும் ‘ஜெனி’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. மேலும், அவர் முதன்முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். யோகி பாபுவை வைத்து இவர் இயக்கும் படத்தின் பெயர் ‘An Ordinary Man’.

இதற்கு அப்பால், ரவி மோகன் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் அவர் ‘ப்ரோ கோட் (BRO CODE)’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை ‘டிக்கிலோனா’ படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில், ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பெயருக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக ‘BRO CODE’ என்ற பெயரில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்துவரும் இன்டோ-ஸ்பிரிட் பீவரேஜஸ் நிறுவனம் (Indospirit Beverages Pvt Ltd), படத்தின் தலைப்பு தங்கள் வர்த்தக முத்திரையை மீறுவதாகக் கூறி படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது, அங்கு அவர்களுக்குச் சாதகமான உத்தரவு கிடைத்தது. இருப்பினும், மதுபான நிறுவனம் இந்த விவகாரத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வர்த்தக முத்திரை மீறல் என்ற கோணத்தில் வழக்கைத் தாக்கல் செய்தது.

மதுபான நிறுவன தரப்பில் “2015 டிசம்பரில் எங்கள் பிரதான தயாரிப்பை ‘ப்ரோ கோட்’ வர்த்தக முத்திரையின் கீழ் அறிமுகப்படுத்தினோம். இந்தத் தலைப்பைப் படத்தில் பயன்படுத்துவது வர்த்தக முத்திரை மீறலாகும், இது எங்கள் பிராண்டின் நற்பெயரைப் பாதிக்கும்,” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

படத் தயாரிப்பு நிறுவன தரப்பில் “வர்த்தக முத்திரை சட்டத்தின் 41-ம் வகுப்பின் கீழ் மதுபான நிறுவனம் குறிப்பிடும் வர்த்தக முத்திரைக்கு எந்தப் பதிவும் இல்லை. அவர்களின் விண்ணப்பம் வர்த்தக முத்திரைகள் பதிவேட்டில் நிலுவையில் மட்டுமே உள்ளது,” என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தேஜாஸ் காரியா, பின்வரும் உத்தரவை வழங்கினார்.

“மனுதாரரின் (மதுபான நிறுவனம்) அனுமதியின்றி படத்தில் அவர்களின் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது வர்த்தக முத்திரை மீறலுக்குச் சமம்.”

“இது மனுதாரரின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், அத்துடன் அவர்களின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்க வழிவகுக்கும்.”

இதன் அடிப்படையில், ‘BRO CODE’ என்ற பெயரைப் பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Posts