“பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழை இன்னும் ஏழை ஆகிறார்” என்று பல சினிமாக்களில் வசனம் வரும். ஆனால் உண்மையும் அதுவாகவே இருக்கிறது என சமீபத்திய Oxfam Report உறுதிசெய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில், இந்த ஆய்வறிக்கையை Oxfam International வெளியிட்டுள்ளது.
Oxfam என்பது உலகளவில் செயல்படும் ஒரு சர்வதேச அரசு அல்லாத அமைப்பு (NGO). Oxfam வெளியிடும் ஆய்வு அறிக்கைகள் ஐ.நா., உலக பொருளாதார மன்றம் போன்றவற்றில் விவாதத்தை உருவாக்குகின்றன.
Oxfam அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 18.3 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.1,660 லட்சம் கோடி ) என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் முன்னணி 4000 கோடீஸ்வரர்களின் சொத்துகள் குறித்து நடத்திய ஆய்வில், இந்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2020 இல் இருந்து அவர்களுடைய சொத்துமதிப்பு 80 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, முதல் 12 கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் அடைந்துள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது.
அதேபோல், பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அறிக்கைப்படி, ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலைய 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
சில நாடுகளின் வரிவிதிப்பு முறையே, கோடீஸ்வரர்கள் அதிகரிக்க காரணம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பணக்காரர்களுக்குச் சாதகமாக வரிகளைக் குறைத்தது மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது போன்ற செயல்பாடுகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாக Oxfam அறிக்கை கூறுகிறது.
அதேபோல பல சமூக ஊடகங்களையும் செய்தி ஊடகங்களையும் பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் இது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைக்காமல், உலக மக்களில் பலர் பசியிலும் வறுமையிலும் வாடுவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இவற்றுக்கு தீர்வாக பணக்காரர்கள் மீது அதிக வரி, அரசியலில் பணத்தின் ஆதிக்கம் குறைப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள், மீடியாவை கட்டுப்படுத்தும் விதிகள் வேண்டும் என்று Oxfam அறிக்கை வலியுறுத்தியுள்ளது.









