இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வருடாந்திர சம்பள உயர்வை இந்த ஆண்டு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான செலவுகள் அதிகரித்து வருவதாலும், மென்பொருள் துறையின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், AI பயன்பாட்டால் ஏற்படும் அன்றாடச் செயலாக்கச் செலவுகளும் அதிகரித்து வருவதால், அந்த செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல, தற்போதைய புவிசார் அரசியல் சூழலும் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளுக்கு சவாலாக இருப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பள உயர்வை வழங்க முடியாது என்றும், இந்த முடிவைத் தவிர்க்க முடியாததற்காக ஊழியர்களிடம் மன்னிப்பு கேப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் இந்நிலைமையைப் பெரும்பாலான ஊழியர்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 18 மாதங்களாக அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றும், இந்த மாற்று முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றியடைகின்றன என்பதை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, “மென்பொருள் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் கவலைக்குரியது!” என்ற அவரது எச்சரிக்கை வாக்கியம் பலரை அச்சத்தில் தள்ளியுள்ளது.
Zoho நிறுவனமே இந்த முடிவை எடுத்திருக்கும் நிலையில், மற்ற சிறுநிறுவனங்களும் இதேபோன்ற முடிவை எடுத்துவிடுமோ என்ற அச்சம் பலரிடையே எழுந்துள்ளது.









