பூமியை கண்காணிக்க நாசாவும், இஸ்ரோவும் இணைந்து தயாரித்த நிசார்(NISAR-NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோளை ஜுலை மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா 2015ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்தியாவும், அமெரிக்காவும் இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் போட்டுக்கொண்டன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் நிசார் செயற்கைக்கோள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. GSLV Mark 2 ராக்கெட் மூலம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி நிசார் விண்ணில் ஏவப்படவுள்ளது. 2,800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோளை, பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ரூ.1,805 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், 6,500 வாட்ஸ் சக்தி திறன் கொண்டதென்றும், இதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மூன்று டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோளில் 12 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய ரேடார் ஆண்டனா இருக்கிறது.
பெரும்பாலான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், பூமியின் மேற்பரப்பை படம்பிடிக்க, சூரிய ஒளியைச் சார்ந்துள்ளன. அதனால், அவை பகல் மற்றும் தெளிவான வானிலையில் மட்டுமே செயல்பட முடியும். ஆனால் நிசார், ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், இது இரவு நேரத்திலும், மேகமூட்டம் நிறைந்த பகுதிகளிலும் கூட துல்லியமாக கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாய முறைகள், காலநிலை மாற்றங்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த தரவுகளை நிசார் துல்லியமாக வழங்குமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.









