கொசுவே இல்லாத நாடாக அறியப்பட்ட ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் காணப்பட்டிருப்பது காலநிலை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா ஆகிய இரு இடங்கள் மட்டுமே கொசுக்களே இல்லாத இடமாக என்று கருதப்பட்டது. இந்த பகுதிகளில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக கொசுக்கள் அங்கே காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டில் வழக்கத்துக்கு மாறாக நிலவிய வெப்பத்தின் காரணமாக, அப்பகுதியில் கொசுக்கள் காணப்பட்டுள்ளன. உள்ளூர் பூச்சி ஆர்வலர் பிஜோர்ன் ஹ்ஜால்டசன், அந்துப்பூச்சிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்டியிருந்த சிகப்பு துணியில், மூன்று புது வகை பூச்சிகள் இருந்துள்ளன. அந்த பூச்சிகள் பார்ப்பதற்கு கொசுக்கள் போல இருந்ததால், அவற்றை பிடித்து ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு ஆய்விற்க்காக அனுப்பினார்.
பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன் நடத்திய ஆய்வில், அவை ஒரு வகை கொசுக்கள் என்றும், அவற்றில் இரண்டு பெண்கொசுக்களும் ஒரு ஆண் கொசுவும் இருந்ததும் தெரியவந்துள்ளது. ‘குலிசெட்டா அன்யுலாட்டா’ எனப்படும் இந்த கொசுக்கள், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் குளிர் எதிர்ப்பு கொசு இனம் பூச்சிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிஜோர்ன் வெளியிட்டுள்ள பதிவில், “இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை உடனடியாக என்னால் உணர முடிந்தது” என்று கூறிய அவர், “கடைசி கோட்டையும் இடிந்து விழுந்தது போல் தெரிகிறது” என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்லாந்தில் வழக்கத்துமாறாக கோடை காலத்தில் 20 டிகிரி வெயில் இருந்ததன் காரணமாக இந்த கொசுக்கள் அங்கு பிழைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கப்பல் மூலமாகவோ, ஏதேனும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட போதோ அதிலிருந்து இந்த கொசுக்கள் இங்கு வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.








