பொது

சட்டமன்றத்தில் இன்று.. முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியபோது “5 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் நிலையில் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதே எனது மகிழ்ச்சிக்கு காரணம். என்னுடைய இலக்கில் நான் வென்று விட்டேன். திமுக ஆட்சி மீண்டும் அமையும்போது எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவில் இருக்கும்” என்றார்.

அதை தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பேசிய அவர், “மகளிர் விடியல் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.29,000 வழங்கி உள்ளோம். அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல முக்கிய தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது ” என்றார்.

இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். அவர்கள் குறித்து பேசிய அவர்,” பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். பணிக்காலத்தின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

அதைதொடர்ந்து சில திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ”கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். அங்கன்வாடி உதவியாளர், சமையலர், உதவியாளர், தூய்மை பணியாளருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியத்தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும். பணி நிறைவு பெறும் நாளில் தரப்படும் ஒட்டுமொத்தத்தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி விண்ணப்பிதித 80,000 பேருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வுத்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

Related Posts