அமேசானில் ரூ.1.87 லட்ச ரூபாய்க்கு சாம்சங் மொபைல் போன் ஆர்டர் செய்த்தவருக்கு பாத்ரூம் டைல்ஸ் டெலிவரி செய்யப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது அமேசான், பிளிப்கார்ட், மீசோ, மிந்த்ரா,நைக்கா என பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளி வீசின. பலரும் தாங்கள் நீண்ட நாளாக வாங்க ஆசைப்பட்ட பொருட்களை ஆஃபர் போட்டதும் வாங்கிக்கொண்டார். அப்படிதான் பெங்களூரை சேர்ந்த பிரேமானந் என்பவர், Samsung Galaxy Fold 7 என்ற மொபைலை 1,86,999 ரூபாய்க்கு புக் செய்திருக்கிறார். தீபாவளிக்கு முதல்நாள் அவருடைய ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.
டெலிவரி செய்யப்பட்ட பார்சல் உள்ளே Samsung Galaxy Fold 7 என்று குறிப்பிடப்பட்டிருந்த அட்டைப்பெட்டி இருந்திருக்கிறது. ஆர்வமாக அவர் அதை பிரித்து பார்த்தபோது, உள்ளே டைல்ஸ் இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தில், வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு 1,86,999 ரூபாயை அமேசான் நிறுவனம் திருப்பி தந்துள்ளது. ஆன்லைனில் இப்படி ஸ்கேம் செய்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
வழக்கமாக ஆன்லைனில் வாங்கும் பொருட்களை பிரிக்கும்போது, வீடியோ எடுக்கும் பழக்கம் இருந்ததால் தன்னால் இந்த ஸ்கேமை ஆதாரத்துடன் நிரூபித்து, பணத்தை திரும்ப வாங்க முடிந்ததாக பிரேமானந் தெரிவித்துள்ளார். நம்பிக்கையின் அடிப்படையில் பல கோடி மக்கள் அமேசானில் பொருட்களை வாங்கிவரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் பொறுப்பு என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.









