பொது

வெடித்த ஜென் Z புரட்சி… தப்பியோடிய மடகாஸ்கர் அதிபர்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் வெடித்த ஜென் Z புரட்சியால் அந்நாட்டு அதிபர் அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். தண்ணீர் பஞ்சத்தை போக்க கோரி சிறிய அளவில் துவங்கிய போராட்டம், இப்போது ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், ஜிம்பாபே நாட்டிற்கு அருகாமையில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு. 3 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாடு, உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் கடற்கொள்ளையர்களின் கூடாரமாக இருந்த மடகாஸ்கர், 1960 வரை பிரெஞ்சு காலனியாக இருந்தது. 1960ல் சுதந்திரம் அடைந்த இந்நாடு, பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான பின்னும் மடகாஸ்கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் காரணம்…

கடந்த மாதம் 19 ஆம் தேதி, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரீவோவில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து போராட்டம் நடத்தவிருந்த இரண்டு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையானது அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவோரின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, “ஜென் Z மடா” (Gen Z Mada) என்ற குழு சமூகவலைத்தளத்தில் துவங்கப்பட்டு, அது நாடு முழுவதும் ஆதரவை பெற்றது. இந்த குழுவின் துணையோடு, செப்டம்பர் 25 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் Gen Z தலைமுறையினர் மட்டுமல்லாது, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் , ஆசியர்கள் உட்ப பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மடகாஸ்கரில் நிலவும் தொடர் மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை சூட்டி காட்டி துவங்கப்பட்ட போராட்டம் , இவற்றுக்கெல்லாம் அரசின் ஊழல் ஆட்சியே காரணம் என்று உருமாறி தீவிரமடைந்தது. “ஊழல் செய்யும் அதிபர் அண்ட்ரே ரஜோலினாவின் ஆட்சி கழிக்கப்படவேண்டும்” என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். கடந்த 2014ல் இருந்து ஆட்சியிலிருக்கும் அதிபர் அண்ட்ரே ரஜோலினா 10 ஆண்டுகளில் முறையான ஆட்சியை தரவில்லை என்றும், ஒரு சர்வாதிகாரியை போல மாறிவருகிறார் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைதியாக துவங்கிய போராட்டம், உணர்ச்சி பெருக்கெடுத்து பெரும் போராட்டமாக வெடித்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது அரசு பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அரசின் இந்த நடவடிக்கை வன்முறையானது என மடகாஸ்கர் அரசை ஐ.நா கண்டித்துள்ளது.

தப்பியோடிய அதிபர்…

2 வாரங்களுக்கு மேலாக நடந்துவரும் மக்களின் இந்த போராட்டத்திற்கு ராணுவமும் ஆதரவு தெரிவித்ததால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, அதிபர் தனி விமானம் மூலம் தப்பியோடியிருப்பதாக தெரியவந்துள்ளது . தப்பியோடுவதற்கு முன் அவர் முகநூலில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார், அந்த காணொளியில், “என்னுடைய பாதுகாப்பிற்காக நான் தப்பிச்செல்கிறேன். மடகாஸ்கரின் அமைதி குலைய நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார். அவர் பிரான்சுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது; இந்த செய்தியை பிரான்ஸ் இதுவரை உறுதிபடுத்தவில்லை. மடகாஸ்கரில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts