பொது

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: ஒரு புராண வரலாற்றுக் கதை!

ஒரு காலத்தில், மதுரா என்ற ஊரில் கம்சன் என்ற கொடூர அரசன் ஆட்சி செய்தான். அவன் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். அந்த அரசனின் கொடுமையால் மக்கள் இருளில் வாழும் போல் துன்பப்பட்டனர்.

பகவத் புராணத்தின்படி, மதுராவை ஆண்ட கம்சன், கிருஷ்ணரின் தாய்மாமன்.

கம்சன் தனது தங்கை தேவகிக்கும் வாசுதேவருக்கும் திருமணம் செய்து வைத்தான். அப்போது, அசரீரி ஒன்று:

“தேவகிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தையால் உனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்,”
என்று எச்சரித்தது.

இதைக் கேட்ட கம்சன், ஆத்திரத்தில் தீப்பிழம்பாய் கொதித்தெழுந்து, தேவகியையும் வாசுதேவரையும் சிறைச்சாலையில் அடைத்து வைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் ஈவிரக்கமின்றி கொடூரமாகக் கொன்றான்.

எட்டாவதாக, ஒரு இருண்ட நள்ளிரவில் தேவகியின் வயிற்றிலிருந்து ஒரு அழகான குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை கருமேகம்போல் நீல நிறத்திலும், சூரியனைப் போல ஒளி வீசியும் இருந்தது. அந்தக் குழந்தையே கடவுளான கிருஷ்ணர்.

கிருஷ்ணர் பிறந்ததும், சிறைச்சாலையின் கதவுகள் தானாகவே திறந்தன. சிறைக் காவலர்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். உடனே, அப்பா வாசுதேவர், தன்னுடைய குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்தார். ஒரு கூடையில் குழந்தையை வைத்து, மழை, புயல், ஆற்றின் வெள்ளம் என எதற்கும் பயப்படாமல் யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்துக்குச் சென்றார்.

அங்கு, தனது நண்பர் நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றார். அந்த நேரத்தில் அவரின் மனைவி யசோதைக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. வாசுதேவர், கிருஷ்ணரை யசோதையிடம் கொடுத்துவிட்டு, அந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

சிறைக்கு வந்ததும், கம்சன் குழந்தையைக் கொல்ல ஓடி வந்தான். ஆனால், கம்சன் கையிலிருந்த அந்தக் குழந்தை மாயையாக விஸ்வரூபம் எடுத்து,

“உன்னைக் கொல்லப்போகும் எட்டாவது குழந்தை ஏற்கனவே வேறு இடத்தில் வளர்ந்து வருகிறது,”
என்று சொல்லிவிட்டு வானத்தில் மறைந்துபோனது.

கோகுலத்தில், வளர்ப்பு தாய் யசோதையால் வளர்ந்த கிருஷ்ணர் வெறும் குழந்தை அல்ல. அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். வெண்ணெய் திருடி, குழல் ஊதி, கோபியர்களைக் கவர்ந்தார். அதே நேரம், பூதனை, சகடாசுரன் போன்ற அரக்கர்களையும் அழித்தார். பெரியவன் ஆனதும், தனது தாய்மாமன் கம்சனை அழித்து மக்களைக் காப்பாற்றினார்.

கிருஷ்ணரின் பிறப்பை, இருள் நிறைந்த உலகத்திற்கு ஒளி கொண்டு வந்த ஒரு நிகழ்வாக நாம் கொண்டாடுகிறோம். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணரின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.

Related Posts