‘பாராசிட்டமல்-650’ (Paracetamol – 650) உட்பட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு கர்நாடகாவில் தடைவிதித்து அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சில அழகுசாதன பொருட்கள் (cosmetics), ஊசிகள் (Injections), சிரப்கள் (Syrups), மாத்திரைகள் (Tablets) மற்றும் கால்நடை மருந்துகள் சில இடம்பெற்றுள்ளன. மைசூரை சேர்ந்த, அபான் பார்மாசிட்டிகல்ஸ் நிறுவனத்தின் Pomol-650 (paracetamol tablets IP 650 mg) மற்றும் என்.ரங்கராவ் நிறுவனத்தின் ஓம் சாந்தி கோல்ட் கிளாஸ் குங்கும் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது.
மேலும், கூட்டு சோடியம் லாக்டெட் ஊசி (Compound Sodium Lactate Injection IP), கோழிகளுக்கு போட பயன்படுத்தப்படும் ND, IB, IBD தடுப்பூசி, MITO Q7 சிரப், கிளிமிஸ்- 2 (Glimiz-2), ஈஸ்ட் ஆப்பிரிக்கன் ஓவர்சிஸ் நிறுவனத்தின் விட்டமின் பி6 (Vitamin B6), விட்டமின் டி3 (Vitamin D3) என 15 மருந்துகள் தரமற்றவை என்று கண்டுபிடிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளன.
தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் அஹமதாபாத்திலிருந்து 5 மருந்து நிறுவனங்கள் இருக்கின்றன. தரமற்ற இந்த மருந்து-மாத்திரைகளை மருத்துவமனைகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும், கிடங்குகளில் சேமித்து வைக்க கூடாது என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்கள் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.









