கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் மகளிருக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை என்ற கொள்கை திட்டம் கர்நாடக மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை 12 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும்படி அந்த திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இத்திட்டம் கர்நாடக மாநிலத்தின் அரசு மற்றும் ஐடி உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பொருந்தும். பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் மொத்தமாகவும் (12 நாட்கள்வரை) விடுப்பு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில பெண்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஸொமேட்டோ’ (Zomato) உணவு டெலிவரி நிறுவனம் இந்த விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பைஜூஸ், ஸ்விகி, மற்றும் எல் & டி போன்ற நிறுவனங்களும் இதே கொள்கையை நடைமுறைப்படுத்தின.
ஒடிசா அரசு கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இதேபோல் 12 நாட்கள் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. பீகார் மாநிலம், தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த விடுப்பினை வழங்கி வருகிறது. கேரளாவில் உள்ள அரசுப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு காரணமாக வருகைப்பதிவில் 2% விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகரில் உள்ள பெண் காவலர்களுக்கு மாதவிடாயின் போது சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2023ல், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் MP ஈடன் (Hibi Eden), அவருக்கு முன்பு 2018ல் காங்கிரஸ் MP சஷி தரூர் என பலர் இதேபோலொரு மசோதாவை தாக்கல் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவை நிலுவையில் இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2024ல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் இதே கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்தனர். ஆனால் எந்த திட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை.
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது குறித்து கொள்கை வரைவு செய்யலாம் என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கடந்த 2024 ஜூலையில் பரிந்துரை செய்தது. ஆனால், எந்த உத்தரவும் போடவில்லை. அதனால் அந்த கொள்கை வரைவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், ஒடிசாவை தொடர்ந்து கர்நாடக அரசு பெண்கள் நலனில் அக்கறை கொண்டு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.









