வணிகம்

RBI எடுக்கப்போகும் முக்கிய முடிவு… EMI-கள் குறைக்கபடுமா?

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை Monetary Policy Committee (MPC) கூட்டத்தை நடத்தும். இந்த கூட்டத்தில் பணவீக்கம், ஜிடிபி போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அவற்றை அடிப்படையாக வைத்து ரெப்போ விகிதத்தை உயர்த்தலாமா அல்லது குறைக்கலாமா என்பதைக் RBI முடிவெடுக்கும். Monetary Policy Committee கூட்டம் வரும் டிசம்பர் 3 – 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்துள்ளதால், வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகளால் ரிசர்வ் வங்கி குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் ரெப்போ விகிதம் என்றால் என்ன?

RBI

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதம் தான் “ரெப்போ விகிதம்”. சரி, இந்த ரெப்போ விகிதத்தை குறைத்தால் வங்கிகள் பயன் பெறும்; அது சாதாரண மக்களுக்கு எவ்வாறு உதவும் என உங்களுக்கு தோன்றலாம்… பொதுவாக நாம் வாங்கும் வீட்டு, தனிநபர் கடன்கள், EMI-களுக்கு ரெப்போ விகிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. RBI ரெப்போ விகிதம் உயர்த்தினால் நமது வீடு அல்லது தனிநபர் கடன்களின் EMI-கள் அதிகரிக்கும். அதேபோல் ரெப்போ விகிதம் குறைந்தால் வங்கிகள் EMI-களை குறைக்கும்.

இந்த ரெப்போ விகிதம் எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது?

பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரெப்போ விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 0.5% குறைக்கப்பட்டது. இதனால் சாதாரண மக்களின் EMI-கள் குறைந்தது. இது ஒரு பக்கம் இருக்க நடுத்தர மக்களின் EMI குறைந்தால் அவர்கள் செய்யும் செலவுகள் அதிகரிக்கும். இதனால் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்பை விட பொருளாதார வளர்ச்சி 8.2% ஆக பதிவாகியுள்ளது. இதனால் RBI ரெப்போ விகிதத்தில் மாற்றம் வராது என சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதைப் புரிந்துகொள்ள நாம் விலைவாசி உயர்வுக்கும் ரெப்போ விகிதத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும். RBI ரெப்போ விகிதத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்யும் முக்கிய காரணங்களில் ஒன்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போதும் அன்றாடம் வாங்கக்கூடிய பொருட்களின் விலைகள் மிக விரைவாக உயரும்; அந்த சமயத்தில் மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும்.

இதனால் EMI தொகை அதிகரிக்கும், அன்றாட செலவுகளை குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். மறுபுறம், பொருளாதாரம் மந்தமாக, பணவீக்கம் மிகக் குறைவாக இருந்தால் கடன் வாங்குவதை ஊக்குவிக்க மத்திய வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கும். இப்படிதான் இந்த ரெப்போ விகிதம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாட்டின் விலைவாசி உயர்வு (Inflation) 4%-க்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மக்களிடம் பணப்புழக்கம் இருக்கும். பணவீக்கம் 2%-க்கு குறைவாக இருந்தால் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும். அதேபோல் பணவீக்கம் 4%க்கு மேல் தாண்டினால், அதை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படும்.

ஒரு வருடத்திற்கு Monetary Policy Committee கூட்டம் 6 முறை நடைபெறும்; அதில்தான் ரெப்போ விகிதம் குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதங்களாக 2%க்கும் குறைவாகவே உள்ளது. இதை சரிசெய்ய கடந்த ஜூன் மாதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது மற்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது.

Related Posts