பொது

சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்.. கெத்து காட்டும் தமிழ்நாடு!

பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வெளியிட்டிருக்கும் இம்பேக்ட் தரவரிசையில் (Impact Rankings 2025), முதல் 400 இடங்களில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டிலிருந்து 4 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தி, ஆண்டுதோறும் இந்நிறுவனம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

ஐக்கிய நாடுகள் நிர்ணயித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு மொத்தம் 130 நாடுகளில் 2,526 பல்கலைக்கழகங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் நான்காவது முறையாக இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தென் கொரியாவின் கியூன்பூக் தேசிய பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. இதுதான் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசியப் பல்கலைக்கழகமாக இருக்கிறது.

இந்தியாவில் இருந்து 135 கல்விநிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், முதல் 50 இடங்களில் இந்தியாவிலிருந்து 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த அமிர்தா பல்கலைக்கழகம் 41வது இடத்திலும், லவ்லி ப்ரோஃபஸ்னல் பல்கலைக்கழகம் 48வது இடத்தையும் பிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு 301- 400 பிரிவில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 101 – 200 என்ற பிரிவுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த கல்விநிறுவனங்களில் பல இந்த ஆண்டு சரிவை சந்தித்திருப்பதாகவும் , ஆசியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் முன்னேற்றப் பாதையில் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. போட்ஸ்வானா, புர்கினா பாஸோ,எல் சல்வடோர், எஸ்டோனியா, மாலத்தீவுகள், நமீபியா, பப்புவா நியூ கினி, செனெகல் ஆகிய நாடுகள் முதல் முறையாக இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பாலின சமத்துவம், நல்ல வேலைவாய்ப்பு, காலநிலை மாற்றம் என பல அளவீடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts