மலையாள திரையுலகில் ‘ஹாப்பி வெட்டிங்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி, சமீபத்தில் தான் உடல் எடையைக் குறைத்த ட்ரான்ஸ்ஃபொர்மேஷன் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
2016-ல் வெளியான ‘ஹாப்பி வெட்டிங்’ திரைப்படத்தில் டீனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் 2019-ல் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்ற இன்னொரு மலையாளப் படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், இவர் ‘தமாஷா’, ‘அப்பன்’, ‘ரோர்ஷாச்’ உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடித்துள்ளார். ‘பறந்து போ’ என்ற தமிழ்ப் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் இசையமைப்பாளர் அபி டாம் சிரியாக்-உடன் திருமணம் நடைபெற்றது.

நடிகை கிரேஸ் ஆண்டனி தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில், அவர் தனது உடல் எடையை 8 மாதங்களில் 15 கிலோ குறைத்துள்ள தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உடல் எடையைக் குறைத்த தனது பயணத்தைப் பற்றி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ள அவர், “80 கிலோவில் இருந்து 65 கிலோ வரை குறைந்திருக்கிறேன். இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இதற்காகப் பல நாட்கள் கஷ்டப்பட்டதாகவும், அழுததாகவும் உணர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இவ்வளவு எடையை எப்படி குறைப்பேன் என்று பல நாட்கள் நினைத்து மனம் வருந்தியதாகவும் கூறியுள்ளார். இதையெல்லாம் தாண்டி மன உறுதியோடு என்னை நானே தைரியப்படுத்திக் கவனம் செலுத்தி உடல் எடையைக் குறைத்துள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார்.










