நாம் சாதாரணமாக ஐந்து ரூபாய்க்கு பத்து ஊக்குகள் வாங்கி, அதை மாதக்கணக்கில் பயன்படுத்துவோம். உடை அலங்காரத்தை சரிசெய்ய உதவும் இந்தக் குட்டி ஊக்குகளைப் பற்றி நாம் பெரிதாக யோசிப்பதில்லை. அவை பெரும்பாலும் தங்க நிறம் மற்றும் வெள்ளி நிறங்களில் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், இதை ஃபேஷன் உலகிற்குக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?
அதுவும் ஒரு கயிற்றால் அலங்கரித்து! பிராடா (Prada) என்ற ஆடம்பர பிராண்ட் அதைச் செய்துள்ளது.
பிராடா நிறுவனம், ஒரு ஊக்கின் மீது வண்ணக் கயிற்றை வைத்து வடிவமைத்து, அதை ஒரு ஃபேஷனாக மாற்றியுள்ளது. இதில் பிராடாவின் சின்னமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு குட்டி ஊக்கின் விலை எவ்வளவு தெரியுமா? நம்மளை தலைசுற்ற வைக்கும் விலை ₹69,000. இந்த விலையைக் கேட்ட நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

“இரண்டு ரூபாய் ஊக்கில், ஐந்து ரூபாய் மதிப்புள்ள வண்ணக் கயிற்றை வைத்து டிசைன் செய்தால் முடிந்துபோகும் வேலை இது. இதற்கு இவ்வளவு தொகையா?” “இந்த விலையில் ஒரு உயர்ரக ஸ்மார்ட்போனையே வாங்கிவிடலாம்!” என்று பலரும் ஆச்சரியத்துடனும், கிண்டலடித்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஃபேஷன் vs எதார்த்தம்: ஒரு பொருளைப் பிராண்டின் பெயரால் ஆடம்பரப் பொருளாக மாற்றுவதன் மூலம் அதன் விலை எவ்வாறு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்கிறது என்பதற்கான உதாரணம்.









