பொது

மறைந்த ”தலைப்பாகை சூறாவளி”!

”தலைப்பாகை சூறாவளி (Turbaned Tornado)” என்று அழைக்கப்பட்ட, பஞ்சாப்பை சேர்ந்த 114 வயது மாரத்தான் ஜாம்பவான் ‘பவுஜா சிங்’, சாலை விபத்தில் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த தலைப்பாகை சூறாவளி?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பியாஸ் பிண்டி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் 1911ஆம் ஆண்டு பிறந்தார். தன் மனைவி மறைவிற்கு பின் 1992ல் லண்டனிலிருந்த தன் மகன் குடும்பத்துடன் செட்டில் ஆனார். பின்னர், 1994 ஆம் ஆண்டு அவருடைய மகன் இறக்கவே, அந்த மனவலியை சரி செய்ய ஜாக்கிங் சென்றிருக்கிறார்.

ஜாக்கிங் ஆர்வமானது, கொஞ்சம் கொஞ்சமாக மாரத்தான் பக்கம் திரும்பியது. அவருடைய கோச் ஹர்மந்தர் சிங் வழிகாட்டுதலுடன், தன்னுடைய 89 வயதில், 26 மைல் தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

2003ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில், 42 கிலோமீட்டரை 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து, 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலக சாதனை படைத்தார். தன்னுடைய 100வது வயதில், டொரோண்டோ வாட்டர்ப்ரண்ட் மாரத்தான் போட்டியில் 42 கிலோமீட்டரை 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடிகளில் கடந்து அசத்தினார். உலகின் முதல் 100 வயது நிரம்பிய மாரத்தான் ‘ஜாம்பவான்’ என்ற பெருமையை பெற்றார்.

தன்னுடைய 101 வயதில் மரத்தான் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பவுஜா சிங், 11 ஆண்டுகளில் 11 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். ”இந்தியாவின் பெருமை” என்ற சிறப்பு பட்டம் 2011 ஆண்டு வழங்ப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இவரைப் பலமுறை பாராட்டியிருக்கிறார். 2012 ஆண்டு ஒலிம்பிக் தீபம் ஏந்திய பெருமையும் இவருக்கு உண்டு.

எதிர்பாராத விபத்து…

மாரத்தானிலிருந்து ஓய்வு பெற்ற பவுஜா சிங், பஞ்சாபில் பியாஸ் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைவர்கள் இரங்கல்

‘பவுஜா சிங்’ மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரத்தான் ஓட்டம் மூலம் பல நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டி கொடுத்த இவர், இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டிருந்த பதிவில், “பவுஜா சிங் தனித்துவமானவர். ஒரு ஓட்டப்பந்தைய வீரராக மிகுந்த மன உறுதி கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது இழப்பு மனவலியை தருகிறது” என்று தெரிவித்துள்ளார். தலைப்பாகை சூறாவளியின் மறைவு வருத்தமளிப்பதாக, மல்லிகர்ஜுன கர்கே பதிவிட்டுள்ளார்.

Related Posts