பிரச்சனைகள் ஒருபோதும் தனியாக வருவதில்லை.. சுங்கவரி விஷயத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு உருவாக்கிய அலையில் உலகம் தள்ளாடிவரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள தெஹ்ரானுக்கு எதிராக, முற்றிலும் ஒருதலைப்பட்சமான ஆனால் தவிர்க்கக்கூடிய ஒரு போரை அமெரிக்கா நடத்திவருகிறது. அது, சர்வதேச ஒழுங்கை அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிவிட்டது. சொல்லப்போனால், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் புவிசார் அரசியல் தளத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டன. இப்பொது நிலவும் ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள், உலக நாடுகளை ஏற்கனவே நெருக்கடியான சூழலுக்குள் தள்ளியுள்ளன. இந்தச் சிக்கல் வலையிலிருந்து வெளியே வருவதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் உலகத் தலைவர்கள் திணறி வருகின்றனர்.
காலநிலையும் புவிசார் அரசியலும் மோதிக்கொண்டல்..
அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தபோது, இயற்கை ஒரு புதிய அச்சுறத்தலை கொண்டுவருகிறது. பசிபிக் பெருங்கடலில் எல் நினோ உருவாகிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் குறைந்த மழைபொழிவையே எல்நினோ கொண்டுவருகிறது. அதிக வெப்பம், குறைந்த மழை பொழிவு என இரண்டு மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தலாம்.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி பார்த்தால், இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவான பருவமழையே பொழியும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பொழியும் பருவமழையானது, நீண்ட கால சராசரியில் 90 சதவீதமாக மட்டுமே இருக்கும். இந்த மதிப்பீட்டில் நான்கு சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ மாதிரிப் பிழை வரம்பு (model error margin) இருக்கலாமென இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் மழை பொழிவு பற்றாக்குறையாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்பதை இது காட்டுகிறது. 1950 முதல், 16 எல்நினோ ஆண்டுகளை இந்தியா சந்தித்திருக்கிறது. அவற்றில் 7 முறை வழக்கமான அளவைவிட குறைவான பருவமழையையே இந்தியா கண்டிருக்கிறது. ஏற்கனவே புவி வெப்பமயமாதல், அதீத வெப்பநிலை, பருவநிலை மாறுபாடு ஆகிவற்றை இந்தியா எதிர்கொண்டு வரும் மோசமான சூழலில் இப்போது எல்நினோவும் வருகிறது. இது இன்னும் பூதகரமான பிரச்சனையாக மாறக்கூடும். இதில் இரண்டு விஷயங்களை கையாளவேண்டியுள்ளது. ஒன்று விவசாய உற்பத்தி. வலுவான சேமிப்பு நிலை விவசாய உற்பத்தியில் ஏற்படப்போகும் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். சேமிப்பு கிடங்குகளில் போதுமான இருப்பு உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மற்றொன்று, எல் நினோ (El Nino) விளைவால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் பெரும் இடையூறுகளைத் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கொள்கை வகுப்பாளர்களுக்கு நெருக்கடி..
தற்போது, கடுமையான பணவீக்கத்தால் உணவு ஒரு கவலையாக மாறியிருக்கிறது. 2027 நிதியாண்டின் பணவீக்க கணிப்பை 4.6 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக RBI அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, விநியோக சங்கிலி பாதிப்பு, பருவமழையில் நிலையற்றத்தன்மை மற்றும் எல்நினோ அபாயம் ஆகியவை இதற்கு காரணமாக RBI கூறுகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், பணவீக்கம் அதன் ஏற்பு வரம்பின் (tolerance band) உச்ச எல்லையை நெருங்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது. அதிகரிக்கும் சரக்கு விலைகள், சரியும் ரூபாயின் மதிப்பு மற்றும் உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து, கொள்கை வகுப்பாளர்களின் பணியை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளன.
(This article is a translated version of the original article published in Industrial Economist. Translated by Veeraselvi Mathiazhagan.)









