இந்தியாவில் சுமார் 44.9 கோடி பேர் அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் இருக்கிறார்கள். குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு உடல் பருமனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் சமோசா மற்றும் ஜிலேபி முக்கிய இடம் வகிக்கின்றன. அதே நேரத்தில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ்களுக்கான பட்டியலில் இவை முதன்மை இடத்தில் உள்ளன என்றும், இவை சிகரெட்டுக்கு இணையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

சமோசா மற்றும் ஜிலேபி போன்ற உணவுகளில் அதிக அளவிலான கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளதால், இவை உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. தொடர்ந்து சாப்பிட்டால், இது சிகரெட்டைப் போல் உடல் நலத்திற்குத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த அபாயத்தை வலியுறுத்த, நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட சில மருத்துவமனைகள், கடைகளில் விற்கப்படும் இத்தகைய உணவுகளில் சிகரெட் பேக்கெட் போன்று “எச்சரிக்கை வாசகம்” இட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளன.
ஆனால், இதனைத் தொடர்ந்து பரவிய செய்தியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்களை உணவுகளில் வைக்க எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. பத்திரிக்கை தகவல் துறை (PIB) இதனை தங்களது X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.








