மழை பெய்தால் புற்கள்தானே முளைக்கும்..? ஆனால் வைரக்கற்கள் முளைக்குமென ஆந்திராவை நோக்கி பலர் படையெடுக்கிறாங்க.
ஆந்திர மாநிலம், ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில், மழை காலங்களில் வைரம் கிடைக்கிறது. அதற்கு காரணம், அப்பகுதியில் இருந்த வைரசுரங்கம்தான். 200 ஆண்டுகளுக்கு முன், ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுமக்களின் கைகளில் அதிர்ஷ்டவசமாக வைரங்கள் சிக்குவது தொடர்கதையாக இருக்கிறது. அதனால், பருவமழைகாலங்களில் இப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில்,கிராம மக்கள் வைர வேட்டையில் இறங்குவார்கள். வைர வேட்டையில் இறங்கிய மக்களில் சிலர், லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளதால், அப்குதியில் வைரவேட்டையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடீஸ்வரர்களான சாமானியர்கள்
வைரவேட்டையில் ஈடுபட்டபோது, 2018ல் ‘பலோட்’ என்பவர் தனது முதல் வைரக்கல்லை எடுத்தாதகவும், அதை ரூ.8 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறியுள்ளார். சமூக சேவகியான தீபிகா துஸாகாந்தி, ஒரு முறை ரூ.5 லட்சம் மதிப்பிலான வைரத்தை கண்டுபிடித்தாகவும், அது பல எழை குழந்தைகளின் கல்விக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் கிடைத்தால், இன்னும் அதிகமான குழந்தைகளை படிக்கவைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
படையெடுக்கும் மக்கள்
வைரவேட்டை பலனளிப்பதால், அப்பகுதிகளுக்கு வெளியூரிலிருந்து மக்கள் படையெடுக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் சிலர் இதை விரும்பவில்லை என்பதால், அவ்வபோது சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சிலர் பெருந்தன்மையாக, மற்ற ஊர்களில் இருந்து வருபவர்களையும் தங்களின் நிலத்தில் வைரம் தேட அனுமதிக்கின்றனர். அப்பகுதியில் பஜ்ரங்லால் என்பவருக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் பலருக்கு கடந்த ஆண்டுகளில் வைரக்கற்கள் கிடைத்திருக்கின்றன. அந்த வைரங்களுக்கு அவர் உரிமைகோராமல், மற்றவர்களின் மகிழ்ச்சியே தனக்கு போதும் என்று இருக்கிறார்.
வெளியூர்களில் வேலையில் இருப்பவர்கள் கூட, மழைகாலத்தில் வேலையை விட்டுவிட்டு இந்த பகுதிகளில் வந்து வைரம் தேட ஆரம்பிக்கின்றனர். ஒரு வைரம் தங்களின் வாழ்கையை மாற்றிவிடும் என்றும் நம்புகின்றனர்.








