கேரளாவில் ‘மூளை தின்னும் அமீபா’ தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வருடம் இந்த தொற்றால் 9 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில் மூன்று பேர் ‘மூளை தின்னும் அமீபா’ தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளது.
‘மூளை தின்னும் அமீபா’ தொற்று என்றால் என்ன?
‘மூளையை தின்னும் அமீபா’ என்று அழைக்கப்படும் ‘நெய்க்லீரியா போலெரி’, ஒரு செல் உயிரினம். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழ்கிறது. முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் இவை இருக்கக்கூடும்.

இந்த வகை நீரில் மூழ்கி குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை தின்று அழித்து, மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவர்கள் இந்த நிலையை ‘பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்’ (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். மூளையை சென்றடையும் அமீபா, அதை தின்று மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த தொற்று ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு, மனிதர்களில் முதல் முறையாக கண்டறியப்பட்டது .
தொற்றின் அறிகுறிகள்…
மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை. அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் மரணம்கூட நிகழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும். தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு சவாலாக இருக்கிறது.
மருத்துவ முறை…
“மூளைத் தின்னும் அமீபா தொற்றுக்கு கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.








